Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 மார்ச் (ஹி.ச)
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், வரும் 31ம் தேதி மாலை 5 மணிக்கு திருவாரூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். திமுக தலைமைக் கழகம் இதனை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்க உள்ளார்.
இதற்கான தொடர் பிரச்சாரத்தை மார்ச் 31ம் தேதி திருவாரூரில் தொடங்க உள்ளார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின், முதற்கட்டமாக திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் ஊரான திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
திருவாரூர் தெற்கு ரத வீதியில் மாலை 5 மணிக்கு இந்த பிரச்சார பொதுக்கூட்டம் தொடங்கும். திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 1ம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி உழவர் சந்தையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்.
இதில், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், திருவரங்கம், மணப்பாறை, முசிறி, துறையூர் ஆகிய தொகுதிகளின் சட்டமன்ற வேட்பாளர்கள் கலந்து கொள்வார்கள்.
அன்றைய தினம் மாலை 5 மணிக்கு கரூர் பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்.
இதில், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் வேட்பாளர்கள் கலந்து கொள்வார்கள்.
ஏப்ரல் 2ம் தேதி காலை 9 மணிக்கு ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மாலை 5 மணிக்கு கோவை பொதுக்கூட்டத்திலும் மு.க. ஸ்டாலின் உரை நிகழ்த்த உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b