தூத்துக்குடி கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு பவனி
தூத்துக்குடி, 29 மார்ச் (ஹி.ச.) இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் 40 நாள் தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தவக்காலத்தின் முடிவில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும்.
Christian Churches in Thoothukudi


தூத்துக்குடி, 29 மார்ச் (ஹி.ச.)

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் 40 நாள் தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தவக்காலத்தின் முடிவில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும். தவக்காலத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அதன் பகுதியாக ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் ஞாயிறு முதல் அந்த வாரம் முழுவதும் பரிசுத்த நாட்களாக அனுசரிக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாக எருசலேம் நகருக்குள் வெற்றி வீரராக நுழைந்ததை நினைவு கூரும் வகையில், குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு இன்று தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு நிகழ்வுகள் நடைபெற்றன.

லூர்தம்மாள்புரம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அருள்தந்தை பவுல் அலங்காரம் சுவாமி திருவுருவக் கேபி முன்பு இருந்து பங்குத்தந்தை செல்வன் பர்னாந்து தலைமையில், அருட்தந்தை அமலன் தமியான் முன்னிலையில் பவனி தொடங்கியது.

பின்னர், இறைமக்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி 'ஓசன்னா' பாடல்களைப் பாடியபடி ஊர்வலமாக ஆலயத்திற்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

இதேபோல் தூத்துக்குடியின் பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயம்,திரு இருதய பேராலயம், புனித அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு குருத்தோலைகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலத்தின் முக்கிய வாரமான இந்தப் புனித வாரத்தில், வரும் ஏப்ரல் 03-ம் தேதி (வெள்ளிக்கிழமை) 'புனித வெள்ளி'யும், ஏப்ரல் 05-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயேசு உயிர்த்தெழுந்த திருநாளான 'ஈஸ்டர்' பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.

Hindusthan Samachar / vidya.b