பெருந்துறை அருகே ஊராட்சி ஒன்றிய செயல் அலுவலர் மாரிச்சாமி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது!
ஈரோடு, 03 மார்ச் (ஹி.ச.) ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நிச்சாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய செயல் அலுவலர் மாரிச்சாமி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிச்சாம்பாளையம
Arrest


ஈரோடு, 03 மார்ச் (ஹி.ச.)

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நிச்சாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய செயல் அலுவலர் மாரிச்சாமி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரின் தந்தை சண்முகம் சமீபத்தில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து சொத்து வரி ரசீதில் தந்தையின் பெயரிலிருந்து தனது பெயருக்கு மாற்றம் செய்ய தினேஷ் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. பெயர் மாற்றம் செய்ய ரூ.6,000 லஞ்சம் கோரியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதில் முதல் கட்டமாக ரூ.2,000 ஐ கூகுள் பே மூலம் பெற்றதாகவும், மீதமுள்ள ரூ.4,000 ஐ நேரடியாக கையில் வழங்குமாறு கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து தினேஷ் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ரேகா தலைமையிலான காவல்துறையினர் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் படி குறியிடப்பட்ட ரூ.4,000 ஐ மாரிச்சாமி பெற்றுக்கொண்ட போது அதிகாரிகள் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட செயல் அலுவலரிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பெருந்துறை மற்றும் நிச்சாம்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN