Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 03 மார்ச் (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டுக்கான உறுதிமொழியை அமைச்சர் மெய்யநாதன் வாசிக்க அதை வீரர்கள் அதிகாரிகள் பார்வையாளர்கள் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மட்டுமல்லாமல் தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 650 காளைகள் களம் இறங்கப்பட உள்ளது.
இதில் 300 காளையர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு விதிமுறைகளை கடைபிடித்தும் நடைபெற்று வருகிறது.
வாடிவாசலிலிருந்து துள்ளிக்குதித்து சீறிப் பாய்ந்து வரும் காளைகளை காளையர்கள் மல்லுக் கட்டி திமிலை தழுவி வருகின்றனர்.
இந்த ஜல்லிகட்டில் சிறந்த முறையில் காளையை அடக்கிய காளையர்களுக்கும் சிறந்த முறையில் களமாடும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், மின்விசிறிகள், காட்பாக்ஸ், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த ஜல்லிக்கட்டில் ஆலங்குடி துணை கண்காணிப்பாளர் தலைமையில் 200 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சுகாதார துறையினர் வருவாய் துறையினர், கால்நடைபராமரிப்புத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரின் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam