Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 மார்ச் (ஹி.ச.)
தமிழக அரசின் மாத ஓய்வூதிய உதவித் தொகை பெற்று வரும் முதியோர், கணவரை இழந்த பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து ரூ.2000 சிறப்பு நிதி வங்கிக் கணக்கில் இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாயை, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான ரூ 3 ஆயிரத்துடன் சேர்த்து மொத்தம் ரூ 5 ஆயிரம் வழங்கியது. 1.31 கோடி பெண்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகளில் பிப்ரவரி மாதம் செலுத்தியது. இது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும், அரசின் மாத ஓய்வூதியத் உதவித் தொகைகளை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர். மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. அவர்களுக்கு சிறப்பு நிதியாக 2,000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் தமிழ்நாடு அரசு வரவு வைத்துள்ளது.
இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என. மொத்தம் 29 லட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும், 5 லட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3,500 ரூபாயும். பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 லட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4,000 ரூபாயும் இன்று காலை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
அதுமட்டுமின்றி, மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8,000 வீதம், மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிதி உதவிகளை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மனநிறைவோடு வரவேற்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b