Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 மார்ச் (ஹி.ச.)
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி, சமூகநீதி விடுதிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்கள், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களில் தகுதித் தேர்வு (டெட்) தாள்-1 மற்றும் தாள்-2 தேர்ச்சி பெறாதவர்கள் பணியைத் தொடரவும் பதவி உயர்வு பெறவும் டெட் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் டெட் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், இத்துறையில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் எமிஸ் ஐடியை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும், எமிஸ் ஐடி இல்லாதவர்கள் பள்ளிகளில் விவரங்களைப் பதிவுசெய்து விரைவாக எமிஸ் ஐடி பெறவும் பள்ளிக்கல்வித் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, எமிஸ் ஐடி இல்லாத ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் விடுதிக்கு அருகில் உள்ள தலைமை ஆசிரியரை அணுகி தங்களுக்கான எமிஸ் ஐடி பெறும் வகையில் தேவையான விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் டெட் தேர்வு எழுதவுள்ள ஆசிரியர்களுக்குத் தேவையான ஆவணங்களைச் சரிபார்த்து உரிய படிவத்தில் விரைந்து பணிச்சான்று வழங்கவும், தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 10 என்பதால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b