வீரக் காளையுடன் நாம் தமிழர் வேட்பாளர் வேட்பு மனுத் தாக்கல்!
புதுக்கோட்டை, 30 மார்ச் (ஹி.ச.) புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொறியாளர் எழிலரசி, இன்று தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு காளையுடன் ஊர்வலமாக வந்து அதிரடியாக வேட்புமனுத் தாக்கல் செய்தார். த
N


புதுக்கோட்டை, 30 மார்ச் (ஹி.ச.)

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொறியாளர் எழிலரசி, இன்று தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு காளையுடன் ஊர்வலமாக வந்து அதிரடியாக வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், புதுக்கோட்டை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொறியாளர் எழிலரசி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அவர் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய முடிவு செய்தார்.

இன்று காலை புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா பகுதிக்கு வந்த எழிலரசி, அங்கிருந்த உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்ப் பண்பாட்டைப் போற்றும் வகையில் தனது தேர்தல் பயணத்தைத் தொடங்கினார்.

பின்னர், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் புடைசூழ உற்சாக ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தின் முன்னே தமிழர்களின் வீர அடையாளமான ஜல்லிக்கட்டு காளை ஒன்று கம்பீரமாக அழைத்து வரப்பட்டது.

கீழ ராஜ வீதி வழியாகச் சென்ற இந்த ஊர்வலம், அங்கிருந்த பொதுமக்களின் பார்வையை வெகுவாகக் கவர்ந்தது.

கலாச்சார அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த இந்த ஊர்வலம் நகர்மன்றப் பகுதியை வந்தடைந்தது.

வழியெங்கும் தொண்டர்கள் கட்சியின் முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர்.

ஊர்வலத்தின் இறுதியில், வேட்பாளர் எழிலரசி புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்றார்.

அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பிரகாஷிடம் தனது வேட்புமனுவை முறைப்படி வழங்கினார்.

கம்பீரமான காளையுடன் நடைபெற்ற இந்த வேட்புமனுத் தாக்கல் நிகழ்வு புதுக்கோட்டை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / Durai.J