Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 30 மார்ச் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு நேரத்தில் தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி இருந்தது.
பல்வேறு அரசியல் கட்சிகளும் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டங்களை நடத்தின. இந்த சம்பவத்தில் அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட ஒன்பது காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில் ஏ1 குற்றவாளியாகக் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சேர்க்கப்பட்டு 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையானது நடைபெற்று வந்தது.
தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், சுமார் 6 ஆண்டு விசாரணைக்குப் பிறகு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் கடந்த 23.06.2026 அன்று மாலை மணியளவில் தீர்ப்பு வழங்கினார்.
இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நபர்களுக்கு இன்று நீதிமன்றம் தண்டனை விவரங்களை அறிவிக்க இருந்தது.
ஆனால் தண்டனை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் கேட்கப்பட்டிருந்த அறிக்கை நீதிமன்றத்தில் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.
தேர்தல் காரணமாக அறிக்கை தாக்கல் செய்யும் பணி தாமதமானதாக அரசு தரப்பில் கூறப்பட்ட நிலையில், தேர்தலுக்கும், அறிக்கை தாக்கல் செய்வதற்கும் என்ன சம்பந்தம்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, சாத்தான்குளம் வழக்கு மிக முக்கியமான வழக்கு.
எந்த கருத்தாக இருந்தாலும் பதில் மனுவாக தாக்கல் செய்யுங்கள் என்று கூறினார்.
இதையடுத்து, இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளித்த நீதிபதி, இந்த வழக்கின் தண்டனை விவரங்கள் அறிவிக்கும் தினத்தை ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / vidya.b