2026 புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் - திருநள்ளாறு தொகுதியின் கள நிலவரம்
காரைக்கால், 30 மார்ச் (ஹி.ச.) திருநள்ளாறு (தொகுதி எண்: 25) சிறப்புகள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள காரைக்கால் மாவட்டத்தின் திருநள்ளாறு தொகுதியில் முக்கிய ஆன்மிகத் தலமான ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோயில், புகழ்பெற்ற அம்பகரத்தூர் ஸ்ர
2026 புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் - திருநள்ளாறு தொகுதியின் கள நிலவரம்


காரைக்கால், 30 மார்ச் (ஹி.ச.)

திருநள்ளாறு

(தொகுதி எண்: 25) சிறப்புகள்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள காரைக்கால் மாவட்டத்தின் திருநள்ளாறு தொகுதியில் முக்கிய ஆன்மிகத் தலமான ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோயில், புகழ்பெற்ற அம்பகரத்தூர் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது.

பாடல் பெற்ற தலமாகவும், நவகிரகங்களில் ஒன்றான ஸ்ரீசனீஸ்வரன் அருள்பாலிக்கும் தலம் என்பதால், நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தோர் கவனத்திலும் திருநள்ளாறு இடம் பெற்றிருப்பதை மறுக்க முடியாது.

மாவட்டத்தில் விளைநிலம் அதிகமுள்ள பகுதியான திருநள்ளாறு, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் அதிகம் கொண்ட பகுதியாகவும் விளங்குகிறது.

விளை நிலப் பகுதி என்பதால் தொழிற்சாலைகள் பெருமளவு இல்லை.

அம்பகரத்தூர், நல்லம்பல், கருக்கன்குடியில் குறிப்பிட்ட சதவீதத்தில் இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர். தலித் கிராமங்கள் பல உள்ளன. வன்னியர், சோழிய வேளாளர் ஆகிய சமூகத்தினர் குறிப்பிட்ட சதவீதத்தில் உள்ளனர்.

வாக்காளர்கள் நிலவரம் :

திருநள்ளாறு நகரப் பகுதியில் தொழில் துறையினரும், அரசுத் துறையினரும், கோயில் பணியாளர்களும், கோயில் சார்ந்த தொழில் செய்வோரும் உள்ளனர். மற்ற பகுதிகள் கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

திருநள்ளாறு தொகுதியில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 34 ஆகும்.

வாக்காளர்கள் எண்ணிக்கை:

ஆண் வாக்காளர்கள் - 14,408.

பெண் வாக்காளர்கள்-16,732.

மற்றவர்கள்-1 என மொத்தம் 31,141 வாக்காளர்கள் உள்ளனர்.

போட்டியிடும் வேட்பாளர்கள் :

இத்தொகுதியில் தற்போது சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக (MLA) பி.ஆர். சிவா இருக்கிறார்.

இந்த தொகுதி 1964 முதல் சுப்புராயலு, சவுந்தரரங்கன், ராமலிங்கம், ஆர். கமலக்கண்ணன் உள்ளிட்டோர் அவர்கள் சார்ந்த கட்சியிலும், புதுவை அரசியலிலும் நீண்ட காலம் பயணித்த அனுபவம் மிக்கவர்கள். 10-ஆவது முறையாக ஆர். கமலக்கண்ணன் தற்போது தேர்தல் களம் காண்கிறார்.

ஆர். கமலக்கண்ணன் வெற்றி பெறும் போது அவர் சார்ந்த கட்சி ஆட்சி அமைத்தால் அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது.

அதுபோல பி.ஆர். சிவாவும் சிறிது காலம் அமைச்சராக இருந்ததன் மூலம் இத்தொகுதி அமைச்சர் பதவிக்கான தகுதியுடையதாக கருத்து கூறப்படுகிறது. தற்போது இந்த தொகுதியில் பாஜக-காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

2026-ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் பாஜக (BJP) சார்பில் ஜி.என்.எஸ். ராஜசேகரன் போட்டியிடுகின்றார்.

காங்கிரஸ் (INC) சார்பில் ஆர். கமலக்கண்ணன் களம் காண்கிறார்.

நடிகர் விஜய் தலைமையேற்று நடத்தும் தமிழக வெற்றி கழகம் (TVK) சார்பில் ஏ. ராஜா முகமது இத்தேர்தலில் போட்டியிடுகின்றார்.

நாம் தமிழர் கட்சி (NTK) சார்பில் எஸ். வினோத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திட்டங்கள் நிறைவேற்றம் :

அதிக பக்தர்களை ஈர்க்கம் பகுதியென்பதால் திருநள்ளாறு கோயில் நகரத் திட்டம் நிறைவேற்றப்பட்டு பல்வேறு திட்டப்பணிகள் முடிக்கப்பட்டன. திருநள்ளாறு-அம்பகரத்தூர் பிரதான சாலை சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. ஆன்மிக பூங்கா அமைக்கப்பட்டது. காரைக்காலில் இருந்து திருநள்ளாறு வழியாக ரயில் பாதை அமைத்து, திருநள்ளாற்றில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது.

மக்களின் எதிர்பார்ப்புகள் :

நல்லம்பல் ஏரியில் காவிரிநீர், மழைநீரை சேமிக்கவேண்டும். வேளாண் பகுதி என்பதால் நிலத்தடி நீர் மேம்பாட்டுக்கு கவனம் செலுத்தவேண்டும். பக்தர்கள் தங்குவதற்கு கூடுதல் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டவேண்டும்.

திருநள்ளாறு கோயிலில் பக்தர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்ய முறையான ஆன்லைன் பதிவு உள்ளிட்ட வசதிகள் மேம்படவேண்டும்.

தொலைதூரம் செல்லும் கிராமங்ளுக்கான சாலைகள் முறையாக மேம்படுத்தவேண்டும். கிராமப்புற மக்கள் நலனுக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தவேண்டும். திருநள்ளாறு அரசு சமுதாய நலவழி மையத்தை மேம்படுத்த வேண்டும் என இத்தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேட்பாளர்கள் பிரசாரம் :

காங்கிரஸ் வேட்பாளர் ஆர். கமலக்கண்ணன், தாம் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்த காலத்தில் செய்த திட்டங்களைக்கூறியும், மத்திய, மாநில அரசுகளினால் மக்களின் அவதி குறித்தும், மக்களின் அடிப்படை வசதிகள் குறைபாட்டைக் களைய சிறப்பு கவனம் செலுத்துவதாக்கூறியும், பாஜக வேட்பாளர் ஜி.என்.எஸ். ராஜசேகரன், மத்திய, மாநில அரசின் திட்டங்களை விளக்கியும், அனைத்து வசதிகளையும் பெற்று தன்னிறைவு பெற்றதாக திருநள்ளாறு விளங்கச் செய்வதாக்கக்கூறி வாக்கு சேகரிக்கின்றனர்.

Hindusthan Samachar / vidya.b