Enter your Email Address to subscribe to our newsletters

சிவகங்கை, 30 மார்ச் (ஹி.ச)
காரைக்குடி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தாய் அன்னம்மாள், மனைவி கயல்விழியுடன் வந்து இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக சீமானின் மனைவி கயல்விழி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:
சேதுபதி மன்னர் பரம்பரையில் வந்தவர்கள் நாம். வாக்குக்கு கையேந்தாதீர்கள். 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் வேண்டும் என யாராவது உங்களிடம் கேட்டார்களா?
நான் மக்களிடம் திரள்நிதி கேட்கிறேன். அன்பு இருக்கிறது கொடுக்கிறான். நீ திருட்டு நிதி வைத்து கொண்டு கட்சி நடத்துகிறாய். நான் திரள் நிதியில், மக்கள் பைசாவில் மக்கள் இயக்கம் நடத்துகிறேன். அதனை ஏன் நீ கேவலப்படுத்துகிறாய். பிச்சை எடுக்கிறான் சீமான் என்கிறாய். மக்களை கையேந்த வைத்தது பிச்சை இல்லாமல் எப்படி இலவசம் ஆகும். 60 ஆண்டு காலமாக மக்களை கையேந்த வைத்தது தான் திராவிட கட்சிகளின் சாதனை.
இலவசமாக பஸ் விடுங்கள் என்று யாராவதும் வந்து அரசிடம் போய் கெஞ்சினார்களா? சாராயக்கடைகளை மூடுவோம் என்று யாரும் சொல்ல முடியவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லி இருப்பதை செய்ய பல லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குவார்கள். மண்ணின் வளத்தை, மக்களின் நலத்தை ஈடாக வைத்து கொண்டு கடன் வாங்குகிறீர்கள்.
எதனை நம்பி கடன் கொடுக்கிறார்கள். கல்வி, மருத்துவம் சிறந்ததாக இருக்கிறதா? எதிர்க்கட்சியாக முதல்வர் ஸ்டாலின் இருந்த போது மக்கள் இலவசத்தை விரும்பில்லை, வேலையை தான் கேட்கிறார்கள் என்று பேசிய வீடியோ இருக்கிறது.
ஒரு நேர்மையான, நல்லாட்சியை கொடுக்க வேண்டும் என நினைப்பவர் ஏன் மக்களுக்கு இலவசமாக தருவதாக கூறி ஏமாற்ற வேண்டும்.
இவ்வாறு சீமான் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b