Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 மார்ச் (ஹி.ச.)
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தின் அரசியல் சூழல் முற்றிலும் மாறக்கூடும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இந்த முறை எட்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை அளித்திருந்ததாக அவர் கூறினார்.
வேட்பாளர்களை தேர்வு செய்வது மிகுந்த அழுத்தம் நிறைந்த பணியாக இருந்ததாகவும், இதுவே தாம் நேரடியாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் கடைசி தேர்தலாக இருக்கக்கூடும் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார்.
இனி வரும் காலங்களில் மாவட்ட நிர்வாகக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாநில நிர்வாகக் குழு ஆய்வு செய்து வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றார்.
வலதுசாரி அரசியல் சக்திகள் வலுப்பெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சில நெருக்கடிகள் இருந்தபோதும் திமுக கூட்டணியில் தொடர்வதாக அவர் தெரிவித்தார். அரூர் தொகுதியை பலமுறை முயற்சி செய்தும் பெற முடியாத நிலை ஏற்பட்டதாகவும், அதனால் அத்தொகுதியிலுள்ள கட்சித் தோழர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டார்.
கட்சித் தோழர்களின் மனநிலையும், போட்டியிடும் தொகுதிகளில் திமுக மூத்த நிர்வாகிகளின் உள்ளக சூழ்நிலையும் கருத்தில் கொண்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதாகவும் அவர் கூறினார். மேலும் மாநில அரசியலில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக குறிப்பிட்ட அவர், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.
மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் பெரிய மாற்றத்தை காணும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போது சிட்டிங் எம்எல்ஏக்களாக உள்ள எஸ்.எஸ். பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு ஆகியோருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், அதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு முன்பு முகநூல் உரையில் பேசிய திருமாவளவன், தமிழகத்தில் தொங்கு சட்டசபை உருவாகும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறியிருந்தார். திமுக ஏன் அதிக தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதற்கும் அவர் விளக்கம் அளித்தார். ஆட்சி அமைக்க விரும்பும் கட்சியாக இருப்பதால் திமுக அதிக தொகுதிகளில் போட்டியிடுவது இயல்பானது என்றார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டு 126 இடங்களில் வெற்றி பெற்றதை அவர் நினைவுபடுத்தினார். தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படுவதாகவும், சபாநாயகரை சேர்த்து குறைந்தது 119 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால்தான் நிலையான ஆட்சி அமைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
அவ்வாறு அந்த எண்ணிக்கை கிடைக்காவிட்டால் தொங்கு சட்டசபை உருவாகும். அப்போது பல்வேறு கட்சிகள் ஆட்சி அமைக்க முயற்சிக்கும் சூழல் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது கூட்டணி ஆட்சியில் பங்கு கோரிக்கை முன்வைக்காதது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமையக்கூடும் என்ற அச்சத்தால்தான் எனவும் கூறினார்.
திமுக தனிப்பெரும்பான்மையில் ஆட்சி அமைக்க வேண்டுமெனில் குறைந்தது 125 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும், அதற்காக அவர்கள் 160 முதல் 170 தொகுதிகள் வரை போட்டியிட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் திருமாவளவன் விளக்கமளித்தார்.
இந்த நிலையில், மாநில அரசியலில் முக்கிய பங்கு வகிக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தாம் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ