Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 31 மார்ச் (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த மார்ச் 16ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
முக்கிய நிகழ்வான தீ குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது.
இன்று அதிகாலை சுமார் 3.55 மணியளவில் கோயில் பூசாரி பார்த்திபன் குண்டத்தை சுற்றிலும் கற்பூரங்கள் பற்றவைத்து குண்டத்தின் மீது பூப்பந்தை உருட்டி அம்மனிடம் வரம் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து கற்பூர ஆரத்தி காட்டப்பட்டு பூசாரி பார்த்திபன் குண்டம் இறங்கினார்.
இதை தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டம் இறங்கினர். இதையொட்டி பண்ணாரி அம்மன் வீணை அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்தபின் கோயில் வளாகத்தை விட்டு வெளியேறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.
குண்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் பக்தர்கள், மாற்றுத்திறனாளிகள், போலீசார், தீயணைப்பு வீரர்கள், திருநங்கைகள் முக்கிய பிரமுகர்கள் என 1 லடத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Hindusthan Samachar / vidya.b