நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி இரண்டு ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு சீல் வைத்த உத்தரவில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
சென்னை, 31 மார்ச் (ஹி.ச.) நீலகிரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு அமர்வு கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்ப
High court


சென்னை, 31 மார்ச் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு அமர்வு கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில், ஊட்டியில் அமைந்துள்ள ஹோம் ஸ்டே விடுதிகளை ஆய்வு செய்த நகராட்சி அதிகாரிகள், உரிமம் இன்றி செயல்பட்டதாக கூறி ஆகாஷ் ரூமஸ் அண்ட் காட்டேஜஸ் மற்றும் கோல்டன் லர்ச் ரெஸிடன்சி ஆகிய இரு விடுதிகளுக்கு சீல் வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ள நிலையில் முன்னறிவிப்பு இல்லாமல் சீல் வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என இரு விடுதிகள் சார்பிலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆய்வின்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டதால், கட்டடத்தை பயன்படுத்த கூடாது என கடந்த ஆண்டு ஜூலை மாதம் நோட்டீஸ் அனுப்பியும், அதை அமல்படுத்தாததால் சீல் வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், இந்த உத்தரவை எதிர்த்து அரசுக்கு மேல்முறையீடு செய்யலாம் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சீல் வைத்ததை எதிர்த்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறி, சிறப்பு அமர்வின் உத்தரவை அமல்படுத்தியதில் விதிமீறல் இருந்தால் மனுதாரர்கள், அதை சம்பந்தப்பட்ட சிறப்பு அமர்வின் கவனத்துக்கு தான் கொண்டுசெல்ல வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தை சிறப்பு அமர்வு கண்காணித்து வரும் நிலையில், அதுதொடர்பாக இந்த அமர்வு ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் அது சிறப்பு அமர்வு விசாரணை நடைமுறைகளை பாதிக்கும் என்றும் தெளிவுபடுத்தினார்.

சீல் வைத்த உத்தரவுக்கு எதிராக அரசிடம் அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு அவகாசம் வழங்காமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதில் தற்போதைய நிலையில் தலையிட முடியாது என கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தனர்.

அதேசமயம், மனுதாரர்கள் இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு அமர்வை அணுக இந்த உத்தரவு தடையாக இருக்காது எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ