முரட்டு அடிமைகளின் சூழ்ச்சிகளுக்குத் தமிழ்நாடு ஒருபோதும் அடிபணியாது - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
திருவண்ணாமலை, 31 மார்ச் (ஹி.ச) தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எ.வ. வேலுவை ஆதரித்து திருவண்ணாமலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகைய
முரட்டு அடிமைகளின் சூழ்ச்சிகளுக்குத் தமிழ்நாடு ஒருபோதும் அடிபணியாது - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்


திருவண்ணாமலை, 31 மார்ச் (ஹி.ச)

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எ.வ. வேலுவை ஆதரித்து திருவண்ணாமலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில்,

முரட்டு பக்தர்கள், முரட்டு கட்சித் தொண்டர்களை நாம் கண்டிருக்கிறோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதா கட்சியின் முரட்டு அடிமையாகத் திகழ்கிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கு அடிபணிந்து, பாரதிய ஜனதா கட்சியைத் தமிழ்நாட்டுக்குள் கொண்டுவர இபிஎஸ் முயன்று வருகிறார் என்று விமர்சித்திருந்தார்.

இதனிடையே, திருவண்ணாமலையில் பிரசாரம் மேற்கொண்ட புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது:

திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு, இன்றைய தினம் வள்ளுவர் சிலை அருகே உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தோம்.

பள்ளி மாணவர்களுக்கு- 'காலை உணவுத் திட்டம்', 'இல்லம் தேடி கல்வி', கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு- 'புதுமைப் பெண்', 'தமிழ்ப் புதல்வன்', லேப்டாப் திட்டம், இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு 'நான் முதல்வன்', பெண்களுக்கு- 'விடியல் பயணம்', 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' என அனைத்து தரப்பினருக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிடமாடல் அரசு வழங்கிவரும் சாதனைத் திட்டங்களைப் பட்டியலிட்டு, சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்களையும் குறிப்பிட்டு உரையாற்றினோம்.

தமிழ்நாட்டின் உரிமைகளை தில்லிக்கு அடகுவைக்கத் துடிக்கும் முரட்டு அடிமைகளின் சூழ்ச்சிகளுக்குத் தமிழ்நாடு ஒருபோதும் அடிபணியாது! தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்!

எனக் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b