Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 31 மார்ச் (ஹி.ச.)
ஏப்ரல் சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் தியாகராஜன் போட்டியிடவுள்ளார்.
அவரை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், முன்னாள் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி இன்று கோடங்கிபட்டி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு அப்பகுதி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
2021 தேர்தலைப் போலவே 2026-ம் சட்டப்பேரவைத் தேர்தலிலும், கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் களம் காண திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார்.
2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கரூர் மாவட்ட மக்கள் நான்கு தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற செய்தனர்.
அதற்கு நன்றி செலுத்தும் விதமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் கரூர் மாவட்டத்திற்கு என்று ரூ.5000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செய்துள்ளார்.
குறிப்பாக கரூர் மாநகராட்சிக்கு மட்டும் சுமார் ரூ.1,140 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே, அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைவரால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தியாகராஜனை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்.
எதிர் முகாமில் உள்ளவர்களுக்கு சாதனையை சொல்லி ஓட்டு கேட்கும் அளவிற்கு அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. அதேபோல் எதிர்முகாமில் உள்ளவர்களின் தேர்தல் அறிக்கையை விட திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு சூப்பர் ஸ்டார்.
திமுகவின் தேர்தல் அறிக்கை அடித்தட்டு மக்கள் வரை சென்று சேர்ந்துள்ளது. நிச்சயமாக மிகப் பெரிய ஆதரவை வாக்குகள் மூலம் கரூர் மாவட்ட மக்கள் திமுகவுக்கும், மதசார்பற்ற கூட்டணிக்கும் வழங்க தயாராக இருகின்றனர்.
நாளை கரூர் மாவட்டம் ராயனூரில் மாவட்டத்தில் திமுக போடியிடவுள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b