2026 தமிழக சட்டமன்ற தேர்தல் - விருத்தாச்சலம் தொகுதி கள நிலவரம்
கடலூர், 31 மார்ச் (ஹி.ச) கடலூர் மாவட்டத்தின் மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான விருத்தாச்சலம் மணிமுத்தாறு நதிக்கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலானது தேவாரப் பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் ஒன்றாகும். ''விரு
Virudhachalam Constituency


கடலூர், 31 மார்ச் (ஹி.ச)

கடலூர் மாவட்டத்தின் மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான விருத்தாச்சலம் மணிமுத்தாறு நதிக்கரையில் அமைந்துள்ளது.

இங்குள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலானது தேவாரப் பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் ஒன்றாகும்.

'விருத்தம்' என்றால் பழமை, 'கிரி' என்றால் மலை. அதாவது, காசிக்கு வீசம் (ஒரு பங்கு) அதிகம் என்று போற்றப்படும் தலம். இந்த ஆலயத்தில் 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 தேர்கள், 5 பிரகாரங்கள் மற்றும் 5 விநாயகர்கள் இருப்பது உலகிலேயே இங்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு ஆகும்.

தரைமட்டத்தில் இருந்து சுமார் 18 அடி ஆழத்தில் அமைந்துள்ள ஆழத்து விநாயகர் சன்னதி மிகவும் பிரபலம். மணவாளநல்லூரில் அமைந்துள்ள கொளஞ்சியப்பர் கோவில் 'வேண்டுதல் தலம்' என அழைக்கப்படுகிறது. பக்தர்கள் தங்கள் குறைகளைச் சீட்டில் எழுதி இங்குள்ள மரத்தில் கட்டினால் நடக்கும் என்பது நம்பிக்கை.

தமிழகத்திலேயே பீங்கான் பொருட்களுக்கெனத் தனியாகச் சிட்கோ (SIDCO) பீங்கான் தொழிற்பேட்டை இங்கு மட்டுமே உள்ளது. மின்சார இன்சுலேட்டர்கள், கலைநயமிக்க பீங்கான் பொம்மைகள் மற்றும் ஜாடிகள் தயாரிப்பதில் இந்நகரம் முன்னோடியாக உள்ளது.

இந்தியாவின் மிகப்பழமையான மற்றும் தமிழகத்தின் ஒரே அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி (Government Institute of Ceramic Technology) இங்குதான் அமைந்துள்ளது.

விருத்தாசலத்தில் உள்ள மண்டல ஆராய்ச்சி நிலையம் முந்திரி சாகுபடியில் புதிய ரகங்களை உருவாக்கி விவசாயிகளுக்குப் பெரிதும் உதவுகிறது.

வாக்காளர்கள் எண்ணிக்கை:

பிப்ரவரி 23, 2026 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,37,836 ஆகும்.

வாக்காளர்களின் விரிவான விவரம்:

ஆண் வாக்காளர்கள்: 1,18,319

பெண் வாக்காளர்கள்: 1,19,495

மூன்றாம் பாலினத்தவர்: 22

மொத்த வாக்காளர்கள்: 2,37,836

இத்தொகுதியில் மொத்தம் 317 வாக்குச்சாவடிகள் உள்ளன.

நிர்வாகம்: இது கடலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

இத்தொகுதியில் அனைத்து மதத்தினரும் வசித்து வந்தபோதிலும் பெரும்பான்மையாக வன்னியர்களும், பட்டியலினத்தவர்களும் உள்ளனர். மற்றவர்கள் குறிப்பிட்ட அளவில் ஆங்காங்கே உள்ளனர். எனினும், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக வன்னியர்களும் பட்டியலினத்தவர்களுமே இருக்கின்றனர்.

அரசியல் நிலவரம் :

2021 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் 862 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

சட்டப்பேரவைத்தொகுதியைப் பொருத்தவரையில் சுயேட்சை, விருத்தாசலம் காங்கிரஸ், திமுக, அதிமுக, ஜனதாதளம், பாமக, தேமுதிக என்று பல்வேறு தரப்பினரும் வெற்றிப் பெற்ற தொகுதியாக உள்ளது.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டு தனது அரசியல் வாழ்க்கையை துவங்கிய தொகுதி என்பதால் தேமுதிகவிற்கும் பரவலான செல்வாக்கு உள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக சார்பில் அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இத்தொகுதியில் போட்டியிடுகின்றார்.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் கட்சியின் சார்பில் எஸ்.விஜய் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக - பாமக - பாஜக கூட்டணியின் சார்பில் பாமக காட்சியைச் சேர்ந்த தமிழரசி ஆதிமூலம் களம் காண்கின்றார்.

இம்முறை தேமுதிக, தவெக மற்றும் பாமக ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விருத்தாச்சலம் மக்களின் எதிர்பார்ப்புகள் :

விருத்தாசலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பது மக்களின் மிக முக்கியமான கோரிக்கை. கடலூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் இருப்பதால், அரசுப் பணிகளுக்காக மக்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

தமிழகத்திலேயே பீங்கான் தொடர்பான தொழில்நுட்பக் கல்லூரியும் அதுதொடர்பான தொழில்களும் சிறந்து விளங்கி வந்த நிலை தற்போது மாறி விட்டது. இக்கல்லூரியில் போதுமான தொழில்நுட்பங்களை புகுத்தாததால் கல்லூரியின் பாடத்திட்டம் மதிப்பிழந்தது. அதனால், பீங்கான் சார்ந்த தொழில்களும் நசிவடைந்தன.

கரும்பு, உளுந்து ஆகியவை அதிகமாக பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் செயல்பட்டு வந்த சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் கரும்பு விவசாயிகள் அதிகமான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். நகருக்குள் ஓடும் மணிமுக்தாற்றில் தடுப்பணை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாகவே கிடப்பில் உள்ளது.

இத்தொகுதியில் கனரகத் தொழிற்சாலை என்பது பெயர் சொல்லும் அளவிற்கு தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் இல்லை. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கூடிய தலைமையே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க பெரிய அளவிலான தொழிற்சாலைகளைத் தொடங்க வேண்டும்.

தற்போதுள்ள பேருந்து நிலையம் இடநெருக்கடியால் தவிப்பதால், நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும்.

இப்பகுதியில் முந்திரி சாகுபடி அதிகம் என்பதால், அரசு சார்பில் முந்திரிப் பதப்படுத்தும் நிலையம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைக்க வேண்டும்.

விவசாயப் பாசனத்திற்காக ஏரி மற்றும் குளங்களைத் தூர்வார வேண்டும்.

விருத்தாசலத்தில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் வசதிகள் வேண்டும்

என்பன போன்ற பல கோரிக்கைகளை இத்தொகுதி மக்கள் முன்வைத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b