Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி., 31 மார்ச் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், சடையமங்கலம் கிராமம், அப்பட்டுவிளை ஊர் - 'சோமசேரி குளத்தின்' மறுகால் பகுதியில் சாலை ஓரத்தில் நின்ற தேக்கு மரத்தை கடந்த ஒரு மாதத்திற்கு முன் சட்ட விரோத நபர்கள் சிலர் வெட்டினர்.
இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் வெட்டப்பட்ட மரங்களை கைப்பற்றி அப்பகுதியிலேயே வைத்துவிட்டு சென்றனர்.
இந்நிலையில் திடீரென்று அந்த மரங்கள் தற்போது காணாமல் போய் உள்ளது.
இது குறித்து வருவாய்த்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்து வருகின்றனர்.
இதனால் தேக்கு மரம் திருட்டு போன சம்பவத்தில் அதிகாரிகளுக்கு தொடர்பு என்ற சந்தேகம் எழுந்துள்ளது
தற்போது மேற்படி விலைமதிப்புள்ள தேக்கு மரத்தை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் அல்லது வருவாய் துறை அதிகாரிகள் ஆகிய யாரோ அல்லது கூட்டாக சேர்ந்து திருடி எடுத்துள்ளதாகவும் அதை விற்று பணத்தை பங்கிட்டு உள்ளார்களோ என்று சந்தேகத்தை எழுப்பி குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அதிகாரிகள் மௌனம் காத்து வருகின்றனர். இதனால் தேக்கு மரம் திருடப்பட்ட சம்பவத்தில் அதிகாரிகள் மீது சந்தேகம் வலுத்து வருகிறது.
குறிப்பாக வருவாய் துறையின் 'அ' பதிவேடட்டின்படி... வண்டிப்பாதை புறம்போக்கு என்று உள்ளது.
அதில் தற்போது தார் சாலை அமைத்து பஸ் போக்குவரத்து நடந்து வருகிறது.
இதனால் இந்த சாலை தக்கலை நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது என்று உறுதி செய்யப்படுகிறது.
மேற்படி சாலை ஓரம் தேக்கு மரம் நின்ற பகுதி
தக்கலை மணக்கரை மாநில நெடுஞ்சாலையில் உள்ளதும், கல்குளம் வட்டம், சடையமங்கலம் கிராமம், புல எண்.449 வண்டிப்பாதை புறம்போக்கில் - அப்பட்டுவிளை ஊர் - (சடையமங்கலம் ஊராட்சி) தக்கலை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் உள்ளதும், நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள 'தக்கலை - மணக்கரை சாலை' ஓரத்தில் உள்ளதும் 'சோமசேரி குளத்தின்' மறுகால் பாயும் பகுதிக்கு அருகிலும் நின்ற மரத்தை சுமார் ஒரு மாதத்திற்கு முன் சட்டவிரோத கும்பல்களை சார்ந்த சிலர் வெட்டி திருடிக் கொண்டு செல்ல முயற்சித்த சம்பவத்தில் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அப்பகுதியை தாலுகா சர்வேயர் மூலம் அளவீடு செய்து அரசு புறம்போக்கு நிலத்தில் நின்ற தேக்கு மரம் என்பதை உறுதி செய்து தேக்கு மரத்தை பறிமுதல் செய்து வைத்துள்ளதாக கூறி அங்கேயே வைத்து சென்றனர்.
தற்போது சமூக விரோத கும்பல்களுடன் கூட்டு சேர்ந்து மேற்படி தேக்கு மரத்தை அதிகாரிகள் ஆட்டையை போட்டு விட்டதாக அதிர்ச்சி குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
குறிப்பாக அரசுக்கு சொந்தமான புறம்போக்கு பகுதியில் நின்ற தேக்கு மரத்தை வெட்டிய சட்டவிரோத கும்பல்கள் மீது அப்போது அதிகாரிகள் எந்தவித குற்ற நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பாக காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை என்றும் அதிர்ச்சி குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.
அதனால் தற்போது தேக்கு மரம் திருடப்பட்ட சம்பவத்தில் அதிகாரிகள் உடந்தையுடன் தான் சட்ட விரோத கும்பல்கள் தேக்கு மரத்தை வெட்டியதா...? என்பதும் தற்போது அந்த தேக்கு மரத்தை மேற்படி அதிகாரிகள் தான் கடத்தி விற்றார்களா...? என்றும் கேள்வி எழுப்பி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.
ஆகவே உடனடியாக மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுத்து தேக்கு மரத்தை திருடி சென்ற கும்பல்கள் மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுத்து அரசுக்கு சொந்தமான தேக்கு மரத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Hindusthan Samachar / Durai.J