Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 மார்ச் (ஹி.ச)
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர், நடிகர் விஜய் தனது சொத்து மற்றும் வருமான விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இந்த தகவல்கள் தற்போது அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடையிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படி,
விஜய்யின் அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.404.58 கோடியாகும்.
இதில் வங்கி சேமிப்புகள், முதலீடுகள், தங்க நகைகள் மற்றும் வாகனங்கள் அடங்குகின்றன.
குறிப்பாக, வங்கி கணக்குகளில் மட்டும் ரூ.213 கோடி இருப்பதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அசையா சொத்துகளின் நடப்பு சந்தை மதிப்பு ரூ.220 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் வீடுகள் மற்றும் நிலங்கள் போன்ற நிலையான சொத்துகள் அடங்கும். விஜய் தனிப்பட்ட முறையில் வாங்கிய அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.92 கோடியாக உள்ளது என்றும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் பெயரில் 391 சவரன் தங்க நகைகள் உள்ளதாகவும், மொத்த தங்க நகைகளின் எடை சுமார் 3132 கிராம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.4.07 கோடி ஆகும்.
மேலும் 883 கிராம் வெள்ளிப் பொருட்கள் ரூ.1.20 கோடி மதிப்பில் உள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் விஜய் ஈட்டிய மொத்த வருமானம் ரூ.734 கோடி எனவும், இந்த வருமானம் திரைப்படங்கள், விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகள் மூலம் கிடைத்ததாகவும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவரது பூர்வீக சொத்துகளின் மதிப்பு ரூ.21.83 கோடி என்றும், மனைவி பெயரில் ரூ.15.51 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், பெரிய அளவிலான கடன் எதுவும் இல்லை என்றும், அனைத்து சொத்து விவரங்களும் சட்டப்படி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ