Enter your Email Address to subscribe to our newsletters

அசாம், 31 மார்ச் (ஹி.ச.)
அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
“சங்கல்ப் பத்ரா” என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
இந்த தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, மருத்துவ வசதி, அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
முக்கியமாக, மாநிலத்தில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2031க்குள் அசாம் மாநில பொருளாதாரத்தை பெரிதும் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் ₹50,000 கோடி செலவில் மேம்பட்ட கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், சில பழங்குடியினர் பகுதிகளை விலக்கி ஒற்றை குடிமைச் சட்டம் அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ₹5 லட்சம் கோடி மதிப்பிலான சாலை, ரயில், விமான நிலைய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளப் பாதிப்பை கட்டுப்படுத்த ₹18,000 கோடி செலவில் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவும், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான சுயதொழில் மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் அறிக்கை மூலம் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு அம்சங்களை முன்னிறுத்தி வாக்காளர்களை கவர பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam