Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 மார்ச் (ஹி.ச.)
குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் மார்ச் 29 ஆம் தேதி ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியதில் அந்த நிறுவனம் பெருத்த சேதமடைந்தது.
அத்துடன் அங்கு பணியாற்றி வந்த இந்தியர் ஒருவர் உயிரிழந்தார்.
இதை குவைத்தின் மின்சாரத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் பாத்திமா ஜவஹர் ஹயாத் தெரிவித்தார். தாக்குதலை தொடர்ந்து அவசர கால மீட்புக்குழுவினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
குவைத்தில் நடந்த தாக்குதலில் இந்தியர் கொல்லப்பட்டதை அங்குள்ள இந்திய தூதரகமும் உறுதி செய்தது. இதற்காக ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த தூதரகம், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்திருந்தது.
குவைத்தில் கொல்லப்பட்ட இந்தியரையும் சேர்த்து இதுவரை இந்தப்போரில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்து இருக்கிறது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே குவைத்தில் பலியான இந்தியர், தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சந்தான செல்வம் (வயது 36) என தகவல் வெளியாகி இருந்தது. வளைகுடா போர் தமிழகத்திலும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் குவைத் நாட்டில் ஈரான் தாக்குதலில் உயிரிழந்த தமிழரின் உடல் நாளை (ஏப்ரல்1ம் தேதி) திருச்சி கொண்டு வரப்படுகிறது.
குவைத்தில் இருந்து சரக்கு விமானம் மூலம் கொச்சின் கொண்டுவரப்படும் சந்தானசெல்வத்தின் உடல், கொச்சினில் இருந்து திருச்சிக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Hindusthan Samachar / vidya.b