காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு - புகாரளித்த நிகிதா நீதிமன்றத்தில் ஆஜர்
மதுரை, 04 மார்ச் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அதே பகுதியைச் சோ்ந்த அஜித்குமார் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். இக்கோயிலில் வழிபாடு செய்வதற்காக வந்த பேராசிரியை நிகிதா, நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல்
Watchman Ajith Kumar murder case


மதுரை, 04 மார்ச் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அதே பகுதியைச் சோ்ந்த அஜித்குமார் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். இக்கோயிலில் வழிபாடு செய்வதற்காக வந்த பேராசிரியை நிகிதா, நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடா்பாக அஜித்குமாரிடம் தனிப் படைக் காவலர்கள் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, தனிப்படைக் காவலர்கள் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனிப்படைக் காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரும் இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கு தொடர்பான சிபிஐ குற்றப்பத்திரிகையில் காவல் வாகன ஓட்டுநரான தனிப் படைக் காவலர் ராமச்சந்திரன், மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமாா், உதவி ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகியோர் கூடுதலாகச் சோ்க்கப்பட்டனர்.

இந்த நிலையில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அஜித்குமார் கொலை வழக்கில் புகாரளித்த மதுரையைச் சேர்ந்த நிகிதாவை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின் போது மார்ச் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் நிகிதாவை நேரில் ஆஜராக நோட்டிஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

அதன்படி அஜித் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் நகை காணாமல் போனதாகப் புகார் அளித்த நிகிதா, மதுரை மாவட்ட கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அசன் முகமது முன்பாக இன்று(மார்ச் 4) நேரில் ஆஜரானார்.

இன்றைய வழக்கு விசாரணையின்போது, நிகிதா அளித்த புகாரை முடித்து வைக்க உள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டது.

இதுகுறித்து உங்களது கருத்து என்ன என நீதிபதி, நிகிதாவிடம் கேள்வி எழுப்பினார். அப்போது நிகிதா கூறுகையில், எனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை, புகார் கொடுத்த வழக்கை முடித்து வைக்கலாம் என்றார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி கூறுகையில்,

நிகிதாவின் கருத்தை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / vidya.b