Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 மார்ச் (ஹி.ச.)
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
இதனிடையே, கடந்த 1ஆம் தேதி இரவு, அவர் தனது இரண்டு தோழிகளுடன் கோட்டூர்புரம் டபிள்யூ.பி.டி சாலையில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டு விட்டு, வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த உணவகத்திற்கு வெளியே நடந்து வந்த நபர் ஒருவர், திடீரென அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், தனது தோழிகளுடன் கோட்டூர்புரம் காவல்நிலையத்துக்குச் சென்று, இதுதொடர்பாக புகாரும் அளித்தார்.
இதன் பேரில், பிஎன்எஸ் சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், இதுகுறித்த விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்டமாக, உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி, கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை அடையாளம் கண்டனர்.
இதையடுத்து, தனிப்படை அமைத்த கோட்டூர்புரம் போலீசார், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் அந்த நபரை கண்டுபிடித்து காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அந்த நபர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகாவைச் சேர்ந்த காசி (வயது 61) என்பதும், கோட்டூர்புரம் பகுதியில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
போலீசாரின் தொடர் விசாரணையில், மாணவியிடம் தவறாக நடந்ததை காசி ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN