Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 04 மார்ச் (ஹி.ச)
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்துக்கு அண்மையில் புதிதாக நுழைவு வளைவு கட்டப்பட்டது. அதில், இந்த அலுவலகத்தின் இந்தி பெயரான ‘கர்தவ்ய த்வார்’ என்கிற வாசகத்தை இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய எழுத்துகளைக் கொண்டு எழுதியுள்ளனர்.
தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தி மொழியில் பெயர் சூட்டப்பட்டிருப்பது புறவாசல் வழியாக இந்தியைத் திணிக்கும் முயற்சி என தமிழகத்தைச் அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில் இந்தியில் பெயர் அமைத்துள்ள தெற்கு ரயில்வே நிர்வாகத்தினரை கண்டித்து திருச்சியில் திமுகவினர் இன்று (மார்ச் 04) முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி ஜங்சன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயில் முன்பு நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமை வகித்தார். மேற்கு மாநகர செயலாளர் மேயர் மு.அன்பழகன் முன்னிலை வகித்தார்.
மேலும், நுழைவு வாயில் கல்வெட்டில் இருந்த இந்தி எழுத்தை கருப்பு பெயின்ட் கொண்டு அழித்தனர். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கையைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இப்போராட்டத்தில் மத்திய மாவட்ட பொருளாளர் துரைராஜ், துணைச் செயலாளர் முத்துச்செல்வம், பகுதி செயலாளர் காஜாமலை விஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்து அங்குள்ள கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழித்தனர். பின்னர், மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவு வாயிலில் உள்ள இந்திப் பெயரை உடனடியாக நீக்க வேண்டும் என முழக்கமிட்டனர்.
இதுகுறித்து மேலதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Hindusthan Samachar / vidya.b