ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றத்தால் ஏற்றுமதி பாதிப்பு - நாமக்கல் மண்டலத்தில் 1 கோடி முட்டைகள் தேக்கம்!
நாமக்கல், 04 மார்ச் (ஹி.ச.) நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள போர் நடவடிக்கைகள் மற்றும் அதற்கு ஈரான் மேற்கொண்ட பதிலடி தாக்குதல்கள் காரணமாக சர்வதேச வர்த்தகம் பாதிக்கப
Egg


நாமக்கல், 04 மார்ச் (ஹி.ச.)

நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள போர் நடவடிக்கைகள் மற்றும் அதற்கு ஈரான் மேற்கொண்ட பதிலடி தாக்குதல்கள் காரணமாக சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதன் தாக்கம் தற்போது நாமக்கல் முட்டை ஏற்றுமதி துறையிலும் வெளிப்படத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் முட்டை உற்பத்தியில் முன்னணி மாவட்டமாக விளங்கும் நாமக்கல், வெளிநாடுகளுக்கு பெரிய அளவில் முட்டைகள் ஏற்றுமதி செய்து வருகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படும் ஏற்றுமதி முக்கிய வருமானமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஈரான் பகுதி சுற்றியுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக கப்பல் போக்குவரத்து மற்றும் சரக்கு அனுப்பும் நடைமுறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்றுமதி தடைபட்டதால், தினசரி அனுப்பப்பட வேண்டிய முட்டைகள் குடோன்களில் தேங்கிக் கொண்டிருக்கின்றன. தற்போது சுமார் 1 கோடி முட்டைகள் வரை கையிருப்பில் இருப்பதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நாட்கள் சேமித்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் தரம் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

முட்டைகள் அதிக அளவில் தேங்கியுள்ளதால் உள்ளூர் சந்தையிலும் விலை சரிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இந்நிலையால் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகின்றனர். போர் பதற்றம் விரைவில் அடங்கினால் மட்டுமே ஏற்றுமதி இயல்புநிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அரசியல் பதற்றத்தின் தாக்கம் நேரடியாக நாமக்கல் மண்டல கோழிப்பண்ணைத் துறையில் பிரதிபலித்துள்ளதால், இந்த நிலை எப்போது சீராகும் என்பது குறித்து தொழில்துறையினர் கவலையுடன் காத்திருக்கின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN