Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 மார்ச் (ஹி.ச.)
சென்னை, மாநிலக் கல்லூரியில் 5.7.2022 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அன்றைய நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விடுதி, மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே அமைத்துத் தரப்படும் என்றும், 2000 பேர் அமரக்கூடிய வகையில், நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பெயரால் மாபெரும் அரங்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் கட்டித் தரப்படும் என்றும் அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கான மாநிலக் கல்லூரி வளாகத்தில் 21 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதியினை 4.12.2024 அன்று முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு, மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் 63 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கத்தினை” தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (மார்ச் 04) திறந்து வைத்தார்.
60,672 சதுர அடி பரப்பளவில் முழுவதும் குளிரூட்டப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய கலையரங்கம், நிர்வாக அலுவலகம், முக்கிய பிரமுகர்கள் அறை, கலைஞர்கள் ஓய்வு அறையுடன் கலையரங்கத்தின் தரைத்தளத்தில் 1,272 நபர்களும், முதல் தளத்தில் 800 நபர்களும் என மொத்தம் 2,042 நபர்கள் அமரக்கூடிய வகையில் “முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b