Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 04 மார்ச் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி பூசாரெட்டிபட்டியை சேர்ந்தவர் சங்கரநாராயணன்(50).
இவர் பந்தல்குடியில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார். இவரது சூப்பர் மார்க்கெட்டுக்கு கடந்த 9.12.25 அன்று அருப்புக்கோட்டை தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தி(48) ஆய்வு நடத்தியுள்ளார்.
அப்போது அங்கு இருந்த பேக்கிங் செய்யப்பட்ட பருப்பு பாக்கெட்டில் விலை தேதி போன்ற லேபிள் இல்லாமல் இருந்ததால் ரூ 5,000 அபராதம் விதித்துள்ளார். அந்த அபராதத்தை செலுத்திய சங்கரநாராயணனிடம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தி தானே பேக்கிங் லைசென்ஸ் பெற்று தருவதாகவும் அதற்கு ரூ 15,000 லஞ்சம் தர வேண்டும் எனவும் சங்கரநாராயணனிடம் சாந்தி கூறியதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சங்கரநாராயணன் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறையை நாடியுள்ளார்.
விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சங்கரநாராயணன் அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோவில் தெருவில் உள்ள தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து இன்று தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தியிடம் வழங்கியுள்ளார்.
அப்போது அங்கு மாறு வேடத்தில் மறைந்து இருந்த விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன் மற்றும் ஜாஸ்மின் மும்தாஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ 15,000 லஞ்சம் வாங்கிய சாந்தியை கையும் களவுமாக கைது செய்தனர்.
அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam