கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய 4 தொழிலாளர்கள் - விஷவாயு தாக்கி மருத்துவமனையில் அனுமதி
ராணிப்பேட்டை, 04 மார்ச் (ஹி.ச.) தனியார் தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய 4 தொழிலாளர்கள், விஷவாயு தாக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதற்கு மத்திய
Poison Gas


ராணிப்பேட்டை, 04 மார்ச் (ஹி.ச.)

தனியார் தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய 4 தொழிலாளர்கள், விஷவாயு தாக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதற்கு மத்திய மாநில அரசுகள் முற்றிலும் தடை விதித்து சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டத்தை பின்பற்றாத நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனினும், சில தனிநபர்கள் தங்களின் சுயலாபத்திற்காக கழிவுநீர் தொட்டிகளில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மனிதர்களை இறக்கி சுத்தம் செய்கின்றனர். இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையின் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் ஒரு பெரிய விபத்து நடந்துள்ளது.

ராணிப்பேட்டை, மாந்தாங்கல், சீனிவாசப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் 92 தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், குழாய் வழியாக இங்கு கொண்டு வரப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.

இந்நிலையில், வி.சி.மோட்டூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள கழிவுநீர் சேகரிப்பு தொட்டியில் அடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சரிசெய்ய 4 பேர் வரவழைக்கப்பட்டனர். அப்போது தொட்டிக்குள் இறங்கிய ஒருவர் திடீரென விஷவாயு தாக்கி அவர் மயங்கி விழுந்துள்ளார்.

அவரை காப்பாற்ற மற்ற மூவரும் அடுத்தடுத்து தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். ஆனால், அவர்களும் விஷவாயு தாக்கி அங்கேயே மயக்கமடைந்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு உபகரணங்களுடன் தொட்டிக்குள் இறங்கி நால்வரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர், அவர்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2024-இல் ஒரு பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கழிவுநீர் தொட்டியில் இறங்கி தொழிலாளர்கள் இறக்கும்பட்சத்தில், ஒப்பந்ததாரர்கள் மீது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அல்லது நகராட்சி ஆணையர்கள் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

மிகவும் தவிர்க்க முடியாத சில தொழில்நுட்ப காரணங்களுக்காக மனிதர்கள் இறங்க வேண்டியிருந்தால், அதற்கு உள்ளாட்சி அதிகாரியின் எழுத்துப்பூர்வ அனுமதி பெறப்பட வேண்டும் எனவும், அந்த சமயத்தில் 44 வகையான பாதுகாப்பு உபகரணங்களும், சிசிடிவி கண்காணிப்பும் கட்டாயம் எனவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த விதிகள் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் அரசாணை பிறப்பித்து நடைமுறைப்படுத்தியது. குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN