தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய இளைஞர் மருத்துவமனையில் அனுமதி
திருச்சி, 04 மார்ச் (ஹி.ச.) தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் பிரச்சாரம், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகள்
தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தை தொடர்ந்து விபத்தில் சிக்கிய இளைஞர் மருத்துவமனையில் அனுமதி


திருச்சி, 04 மார்ச் (ஹி.ச.)

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தேர்தல் பிரச்சாரம், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகள் தொடங்கியுள்ளன.

இத்தகைய சூழலில் தான் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்தி முடித்திருந்தார்.

இந்நிலையில் அதன் தொடர்ச்சியாகத் தஞ்சாவூரில் தனது தனது தேர்தல் பரப்புரையை விஜய், இன்று (04.03.2026) மேற்கொள்ள உள்ளார். இதற்காகத் தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள திடலில் இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த விஜய், சாலை வழியாக தஞ்சாவூர் சென்று கொண்டிருக்கிறார்.

ஏற்கெனவே தனது வாகனத்தை யாரும் பின் தொடர வேண்டாம் என்று விஜய் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், தஞ்சை சாலையில் முக்கிய இடங்களில் விஜய்யை பார்க்க மக்கள் திரண்டுள்ளனர்.

துவாக்குடி சுங்கச் சாவடி அருகே விஜய்யின் வாகனம் வந்தபோது, விஜய்யின் வாகனத்தை தொண்டர்கள் சூழ்ந்தனர்.

தொடர்ந்து வாகனத்தின் வேகத்தை குறைத்து, தொண்டர்களுக்கு விஜய் கையசைத்து சென்றார்.

சில தவெக தொண்டர்கள் ஆர்வ மிகுதியில் விஜய்யின் வாகனத்தை பைக்கில் விரட்டி வந்தனர். ஹெல்மெட் அணியாமல், சாலை விதிகளை மதிக்காமல் ஆபத்தான முறையில் பலர் பைக்கில் பின்தொடர்ந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து சிலர் விபத்தில் சிக்கினர்.

இதில் இளைஞர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Hindusthan Samachar / vidya.b