Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 மார்ச் (ஹி.ச.)
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கொடிகட்டிப் பறக்கும் இந்த காலகட்டத்தில், இளைஞர்கள் முன்னேற்றம் அடைவதற்கும், தங்கள் பணியில் அடுத்த நிலைக்கு உயருவதற்கும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, பிரபல ஏஐ நிறுவனமான ஆந்த்ரோபிக் தலைமை நிர்வாக அதிகாரி டேரியோ அமோடெய் சில யோசனைகளை கூறியுள்ளார். அவை பின்வருமாறு:
ஏஐ தொழில்நுட்பம், கோடிங் வேலைகளை மின்னல் வேகத்தில் கற்றுக்கொண்டு செய்து முடிக்கும். ஆகையால், கோடிங் மட்டும் தெரிந்திருந்தால் போதாது.
ஒரு முழுமையான மென்பொருளை உருவாக்குதல், அதை வடிவமைத்தல், பயனர்களின் தேவைகளை அறிந்து அதை செயல்படுத்துவது போன்ற பெரிய வேலைகளை ஏஐ செய்ய இன்னும் அதிக காலம் தேவைப்படும்.
ஒரு வேலையின் 95% பகுதியை ஏஐ செய்து முடித்தால், மீதமுள்ள 5% முக்கியமான முடிவுகளை எடுப்பது மட்டுமே மனிதனின் பணியாக இருக்கும்.
ஆனால், அந்த 5% வேலையைச் செய்வதன் மூலம் நீங்கள் 20 மடங்கு அதிக உற்பத்தி திறனைப் பெற முடியும். அதாவது, ஏஐயை ஒரு கருவியாக பயன்படுத்தி வேலைகளை விரைவாக முடிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
மனித உணர்வுகள், மற்றவர்களுடன் பழகுதல் மற்றும் புரிந்து கொள்ளுதல் போன்றவற்றை எதிர்காலத்தில் இயந்திரங்களால் செய்ய முடியாத அல்லது கடினமான விஷயங்களாக இருக்கும்.
ஆகையால், மனிதர்களுடன் நெருங்கிப் பழகிச் செய்யும் வேலைகளான மனநல ஆலோசனை, சிக்கலான நிர்வாகம், கற்பித்தல் போன்ற துறைகளுக்கு அதிக வரவேற்பு இருக்கும்.
மெய்நிகர் உலகத்தைத் கடந்து, நிஜ உலகில் நிகழும் மாற்றங்கள், உற்பத்தித் துறை மற்றும் விநியோக சங்கிலி சம்பந்தப்பட்ட பணிகளில் ஏஐ-ன் தாக்கம் குறைவாகவே இருக்கும். ஆகவே, தொழில்நுட்பத்துடன் நிஜ உலக செயல்பாடுகளை இணைக்கும் துறைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஏஐ-ஐ உங்கள் எதிரியாக நினைக்காமல், அதை ஒரு உதவியாளராக மாற்றி கொள்ளுங்கள்.
எது உண்மை, எது ஏஐ உருவாக்கிய பொய் என்பதை கண்டுபிடிக்க முடியாத காலம் வரலாம். எனவே, எதையும் ஆழமாக சிந்தித்து பார்க்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM