Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 05 மார்ச் (ஹி.ச.)
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA) சார்பாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இன்று தூத்துக்குடியில் அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்திலிருந்து கண்டன ஊர்வலம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், கிராம நிர்வாக அலுவலர் சங்க ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், மற்றும் முக்கிய நிர்வாகிகளான சந்திரசேகரன், சண்முகராஜ், சுரேஷ்குமார், லிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் 42 பெண்கள் உட்பட மொத்தம் 97 வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
ஊர்வலமாக வந்த போராட்டக்காரர்கள், பாளையங்கோட்டை சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு திடீரென நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது நீண்டகால கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த மறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சுமார் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் இருந்த தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் மோகன் அய்யர் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட 97 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
Hindusthan Samachar / vidya.b