Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 05 மார்ச் (ஹி.ச.)
இடைக்காட்டூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த இடைக்காட்டூர் கிராமத்திற்குள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த 9 பேர் கொண்ட கும்பல், அங்குள்ள பட்டியலின மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அப்பாவி மக்களின் பாதுகாப்பைக் கூட உறுதி செய்வதற்கு துப்பற்ற நிலையில் திமுக அரசு முடங்கிக் கிடப்பது கண்டிக்கத்தக்கது.
இடைக்காட்டூர் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மது போதையில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
மதுவை ஒழிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், தெருவுக்கு தெரு மதுக்கடைகளையும், சட்டவிரோத சந்துக்கடைகளையும் திறந்து வைத்திருக்கும் திமுக அரசு தான் இந்த மோதலுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகில் சில நாட்களுக்கு முன் கஞ்சா போதைக் கும்பல் நடத்திய சாதிவெறித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பதற்றம் விலகும் முன்பே அதேபோன்ற தாக்குதல் சிவகங்களை மாவட்டத்திலும் நடந்திருப்பது அச்சத்தையும், பதட்டத்தையும் அதிகரிக்கச் செய்துள்ளது.
அப்பாவி மக்கள் நிம்மதியாக வாழவே முடியாதா? என்ற கவலையையும் இந்தத் தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே சட்டவிரோதமாக மது, கஞ்சா விற்பவர்கள், வழிப்பறிகளில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட சமூக விரோத சக்திகள் மட்டும் தான் பாதுகாப்பாக வாழ முடிகிறது.
அப்பாவி மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கை இந்த அளவுக்கு சீர்குலைத்திருக்கும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ