வவ்வால்களால் விளைச்சல் பாதிப்பு - இலவம் பஞ்சு விவசாயிகள் வேதனை
தேனி, 05 மார்ச் (ஹி.ச.) தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்துள்ள வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, முத்தாலம்பாறை, குமணன்தொழு, கோம்பைத்தொழு, அரசரடி, வெள்ளிமலை மற்றும் தேனி, போடி, பெரியகுளம் உட்பட பல ஊர்களில் ஆயிரக்கணக்கான இலவ ம
வவ்வால்களால் விளைச்சல் பாதிப்பு - இலவம் பிஞ்சு விவசாயிகள் வேதனை


தேனி, 05 மார்ச் (ஹி.ச.)

தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்துள்ள வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, முத்தாலம்பாறை, குமணன்தொழு, கோம்பைத்தொழு, அரசரடி, வெள்ளிமலை மற்றும் தேனி, போடி, பெரியகுளம் உட்பட பல ஊர்களில் ஆயிரக்கணக்கான இலவ மரங்கள் உள்ளன.

இலவ மரங்களில் முதிர்ந்த காய்கள் காய்ந்து வெடித்த பின் அதிலிருந்து எடுக்கப்படும் பஞ்சு மெத்தை, தலையணை தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இலவ மரங்களில் டிசம்பர் ஜனவரி மாதங்களில் காய்த்த காய்கள் பிப்ரவரி, மார்ச், ஏப்ரலில் பஞ்சு வெளியேறும் அளவிற்கு காய்ந்து விடும்.

அந்த வகையில் இலவ மர தோப்புகளில் தற்போது இலவம் பிஞ்சு சீசன் தொடங்கியுள்ளது. இதனால், வவ்வால்களின் தொல்லையும் அதிகரித்துள்ளது. தோப்புகளுக்கு வரும் வவ்வால்கள் இலவம் பிஞ்சுகளை கடிக்கின்றன.

இதனால், பிஞ்சுகள் சேதம் அடைகின்றன. ஒவ்வொரு தோப்புக்கும் பல ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வருகின்றன. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் இலவந்தோப்புக்கு காவலுக்குச் செல்லும் விவசாயிகள் பட்டாசு வெடித்தும், சத்தமிட்டும் வவ்வால்களை விரட்டி வருகின்றனர்.

இது குறித்து வருசநாடு விவசாயிகள் கூறுகையில்,

ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி, தை, மாசி மாதங்களில் வவ்வால்கள் வந்து இலவம் பிஞ்சுகளை கடித்து காயப்படுத்துகின்றன. இதனால், மகசூல் பாதிக்கப்படுகிறது.

இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஒரு கிலோ இலவம் பிஞ்சு ரூ.85 முதல் 100 வரை விலை போகிறது. மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் வந்து வாங்கிச் செல்கின்றனர். தற்போது இலவம் பிஞ்சு சீசன் களை கட்ட தொடங்கியுள்ளது.

கடந்த சில மாதங்களாக இருப்பு வைத்திருந்த இலவம் பிஞ்சுவின் விலை தொடர்ந்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதேபோல இலவம் பஞ்சு கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது.

இடைத்தரகர்கள் இலவம் பஞ்சையும், பிஞ்சையும் மொத்தமாக வாங்கி குடோன்களில் இருப்பு வைத்து அதிக விலைக்கு விற்கின்றனர்.

எனவே, விவசாயிகளுக்கும் நியாயமான இலாபம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Hindusthan Samachar / vidya.b