Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 05 மார்ச் (ஹி.ச.)
சென்னை பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (58) என்பவர், ஆன்லைன் மூலம் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இரண்டு பேரிடம் தலா ரூ.3 லட்சம் வீதம் மொத்தம் ரூ.6 லட்சம் பணம் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளாக வங்கிக் கடன் பெற்றுத் தராமல் காலதாமதம் செய்து வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் பெற்ற பணத்தையும் திரும்ப வழங்காமல் தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த பாதிக்கப்பட்டவர்கள், ரமேஷ்குமாரை திருப்பூர் அருகே உள்ள அவிநாசியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. அவர் அங்கு வந்தபோது, அவரை காரில் ஏற்றி கடத்திச் சென்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் ரமேஷ்குமாரை திருப்பூர் செவந்தாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கார் பார்க்கிங் பகுதியில் அடைத்து வைத்து, இரண்டு நாட்களாக பணத்தை திருப்பி தருமாறு கேட்டு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் அடிப்படையில் தங்கப்பாண்டி, அன்பு, இசக்கிராஜா, முத்துக்குமார் மற்றும் ரஞ்சித் குமார் ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN