Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 மார்ச் (ஹி.ச.)
மாநிலங்களவை உறுப்பினர்களான என்.ஆர். இளங்கோ, பி. செல்வராசு, எம். தம்பிதுரை, திருச்சி சிவா, கனிமொழி என்.வி.என். சோமு மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
எனவே இந்த காலி இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைக்க உள்ளன. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (05.03.2026) கடைசி நாள் ஆகும்
இந்த நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தேமுதிக வேட்பாளர் எல்.கே. சுதீஷ் இன்று(மார்ச் 5) வேட்புமனு தாக்கல் செய்தார்.
திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ள நிலையில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்படுமென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.
அதன்படி வரும் மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவுக்கு 4 இடங்கள் உள்ள நிலையில் திமுக சார்பில் இருவரும் தேமுதிக, காங்கிரஸுக்கு தலா ஒரு இடமும் கொடுக்கப்பட்டுள்ளது.
தேமுதிகவில் எதிர்பார்த்தபடியே கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்ற நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தேமுதிக வேட்பாளர் எல்.கே. சுதீஷ் இன்று(மார்ச் 5) வேட்புமனு தாக்கல் செய்தார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தேமுதிக சார்பில் முதல்முறையாக ஒருவர் நாடாளுமன்றத்திற்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b