Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 05 மார்ச் (ஹி.ச.)
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்தவர் ஆர். மணிகண்டன். இவர் மெக்கானிக்கல் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
ரயில் நிலையத்தில் இன்டென்சி கிளீனிங் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கியதால் மணிகண்டன் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக இன்று மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் விழுப்புரம் – புதுவை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், உயிரிழந்த மணிகண்டனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், குடும்பத்திற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், சம்பவத்துக்கு காரணமான ரயில்வே ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக விழுப்புரம் – புதுவை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த விழுப்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர்களின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மணிகண்டனின் உறவினர்கள் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam