Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 05 மார்ச் (ஹி.ச)
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான நலத்திட்டங்களுக்காக ஒன்றிய அரசு வழங்கி வந்த நிதி ஒதுக்கீட்டை கடந்த சில ஆண்டுகளில் கடுமையாக குறைத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
ஒன்றிய பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய பலவகையான துறைகளின் நிதியை கடுமையாக குறைத்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கின்றது. சில துறைகளுக்கு நிதியே வழங்கவில்லை.
சமூக நீதியும் சமத்துவமும் நிலைநாட்டப்பட வேண்டிய நிலையில், சமூக ரீதியாக பின்தங்கியுள்ள விளிம்புநிலை மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான நல நிதி ஒதுக்கீட்டை குறைப்பது அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
குறிப்பாக, 2018–19 ஆம் ஆண்டில் ரூ.1,553 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பின்னர் ஆண்டுகளில் அந்த நிதி படிப்படியாக குறைக்கப்பட்டு 2022–23 ஆம் ஆண்டில் வெறும் ரூ.159.78 கோடி மட்டுமே வழங்கப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயமாகும். இத்தகைய நடவடிக்கை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலன்களை புறக்கணிக்கும் செயலாகும்.
எனவே, ஒன்றிய அரசு உடனடியாக இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும்.
மேலும், இந்த மக்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் தடையின்றி நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ