டி20 உலகக்கோப்பை - முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
கொல்கத்தா, 05 மார்ச் (ஹி.ச.) 2026 டி20 உலகக் கோப்பை தொடர் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 போட்டி முடிந்த நிலையில், இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. முதல் அரை
டி20 உலகக்கோப்பை - முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி


கொல்கத்தா, 05 மார்ச் (ஹி.ச.)

2026 டி20 உலகக் கோப்பை தொடர் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

சூப்பர் 8 போட்டி முடிந்த நிலையில், இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

அதன்படி, முதல் அரையிறுதிப் போட்டி நேற்று கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெற்றது. போட்டிக்கான டாஸை வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனால், தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் எய்டென் மார்க்ரம் களம் இறங்கினர். இதில் டி காக் அதிரடியாக விளையாடுவார் என நினைத்த நிலையில் 10(8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து களம் இறங்கிய ரைன் ரிக்கெல்டனும் முதல் பந்திலே அவுட்டானார்.

பிறகு மார்க்ரமுடன் பிரெவிஸ் சேர்ந்தார். இருவரும் மெதுவாக விளையாட அணியின் ஸ்கோர் 50-ஐ தாண்டியது. இடையில், மார்க்ரம் 18(20) ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த மில்லரும் 6(6) ரன்களில் அவுட்டாகி ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தார். ஒரு பக்கம் நிதானமாக ஆடிய பிரெவிஸும் 34(27) ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

பிறகு ஸ்டப்ஸ் மற்றும் ஜான்சன் சேர்ந்து அணியின் ஸ்கோரை அதிகமாக்கினர். அணியின் ஸ்கோர் 150-ஐ தாண்டிய நிலையில், ஸ்டப்ஸ் 29(24) ரன்களில் அவுட்டானார். இன்னொரு பக்கம் அதிரடியாக விளையாடிய மார்கோ ஜான்சன் அரைசதம் அடித்து அசத்தினர்.

முடிவில் தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்கோ ஜான்சன் ஆட்டமிழக்காமல் 55(30) ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியில் கோல் மெகான்சி, மாட் ஹென்றி மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து விளையாடியது.

தொடக்க வீரர்களாக டிம் சைபராட், பின் ஆலன் களம் இறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர்.

பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். டிம் சீபராட் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை பின் ஆலன் அடித்து துவம்சம் செய்து 33 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

அதனால் 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து 173 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Hindusthan Samachar / JANAKI RAM