Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பத்தூர், 05 மார்ச் (ஹி.ச.)
கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் வரை செல்லும் தன்பாத் - அலப்பி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த நாரனின் மகன் ராஜா (வயது 35) என்பவர் டிக்கெட் எடுக்காமல் பயணித்துள்ளார். S4 கோச்சில் பயணித்த அவர் ரயில் உள்ளேயே மது அருந்தி உள்ளார். இதைப் பார்த்த ரயில் பயணிகள் பயணச் சீட்டு பரிசோதகருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து S4 கோச்சிற்குச் சென்ற டிடிஆர் ஆலன், “ஏன் ரயிலில் அமர்ந்து மது அருந்துகிறாய்?” என்று ராஜாவிடம் கேட்டதோடு, டிக்கெட்டை காட்டுமாறு கேட்டுள்ளார். தன்னிடம் டிக்கெட் இல்லாததால் மதுபோதையில் இருந்த ராஜா, ஆத்திரத்தில் டிக்கெட் பரிசோதகர் ஆலனை தாக்கியுள்ளார்.
டிடிஆரை பயணி ஒருவர் தாக்குவதாக கிடைத்த தகவலின் பேரில் அந்த கோச்சிற்குச் சென்ற முதன்மை டிக்கெட் பரிசோதகரான சென்னை பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த குடியப்பன் மகன் ஜோதிலிங்கம் (வயது 49) அந்த இளைஞரிடம் இது குறித்து விசாரித்துள்ளார்.
இதனால் மேலும் கோபமடைந்த ராஜா, ஜோதிலிங்கத்தை ரயில் கழிவறைக்குள் தள்ளிச் சென்று, இரும்பு கொக்கியால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். டிடிஆர் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
அதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டம் சாமல்பட்டி அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது மது போதையில் இருந்த வட மாநில இளைஞரான ராஜா, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். அவருடன் பயணித்த மற்ற இரு வடமாநில இளைஞர்களும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த ராஜாவை ரயில்வே ஊழியர்கள் மீட்டனர்.
பின்னர் ரயில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்ததும், டிக்கெட் பரிசோதகர்களுக்கும் வடமாநில இளைஞருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதகர்களை தாக்கிய வட வடமாநில இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / ANANDHAN