ஈரானின் வான்வெளியை அமெரிக்காவும், இஸ்ரேலும் முழுமையாக கைப்பற்றும் - அமெரிக்கா அறிவிப்பு
வாஷிங்டன், 05 மார்ச் (ஹி.ச.) அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது பிப்ரவரி 28-ஆம் தேதி வான் வழியாக கடுமையான தாக்குதல் நடத்தின. நான்கு நாட்கள் தொடர்ச்சியாக நடந்த இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர
ஈரானின் வான்வெளியை அமெரிக்காவும், இஸ்ரேலும் முழுமையாக கைப்பற்றும் - அமெரிக்கா அறிவிப்பு


வாஷிங்டன், 05 மார்ச் (ஹி.ச.)

அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது பிப்ரவரி 28-ஆம் தேதி வான் வழியாக கடுமையான தாக்குதல் நடத்தின.

நான்கு நாட்கள் தொடர்ச்சியாக நடந்த இந்தத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர்.

இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் இருந்த ஈரானின் போர் கப்பலை அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கடலுக்கு அடியில் இருந்து குண்டுகளை வீசித் தாக்கியது.

இதில் அந்தக் கப்பல் பல துண்டுகளாக உடைந்து, வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது. அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தாக்கிய காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்சேத் பேசுகையில்,

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல்முறையாக எதிரி நாட்டு கப்பலை நீருக்கடியில் இருந்து மூழ்கடிக்கும் தாக்குதல் நடந்துள்ளது. அந்தப் போருக்குப் பிறகு இப்போதுதான் இதைச் செய்திருக்கிறோம்.

சர்வதேச கடல் பகுதிகளில் தங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது, நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று அவர்கள் நினைத்திருந்தனர். அதை டார்பிடோ வகை நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்குள் மூழ்கடித்துவிட்டது. இது அமைதியான மரணம்.

என்று அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து ஹெக்சேத் பேசுகையில், நேற்றிரவு முதல் இன்னும் சில நாட்களில் இதை முடித்துவிடுவோம். உலகின் இரண்டு பெரிய சக்தி வாய்ந்த விமானப் படைகளான எங்களை ஈரானால் வெல்ல முடியாது.

ஈரானின் வான்வெளியை அமெரிக்காவும் இஸ்ரேலும் முழுமையாகக் கைப்பற்றும் என்று கூறினார்.

Hindusthan Samachar / JANAKI RAM