வேளச்சேரி - பரங்கிமலை ரயில் பாதை இடையே இன்று சோதனை ஓட்டம்!
சென்னை, 05 மார்ச் (ஹி.ச.) சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயங்கி வரும் ரயில் சேவை பொதுமக்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்த சேவையை பரங்கிமலை வரை நீட்டிக்க வேண்டும் என்ற திட்டம் 2008 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. வேளச்சேரியில் ம
Southern Railway


சென்னை, 05 மார்ச் (ஹி.ச.)

சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயங்கி வரும் ரயில் சேவை பொதுமக்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்த சேவையை பரங்கிமலை வரை நீட்டிக்க வேண்டும் என்ற திட்டம் 2008 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

வேளச்சேரியில் முடிவடைந்த பாதையை பரங்கிமலை புறநகர் ரயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டது.

இதன் மூலம் நகரின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்து சுமை குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நிலம் கையகப்படுத்துதல் சிக்கல்கள், நிர்வாக அனுமதி தாமதங்கள் மற்றும் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக பணிகள் நீண்டகாலம் தாமதமானது.

குறிப்பாக நீதிமன்ற வழக்குகள் காரணமாக ஒரு கட்டத்தில் பணிகள் முற்றிலும் நின்று போனது.

பின்னர் அவை தீர்வு காணப்பட்டதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் வேகமெடுத்து பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

தற்போது கட்டுமான மற்றும் தண்டவாள அமைப்பு உள்ளிட்ட அனைத்து முக்கிய பணிகளும் நிறைவடைந்து, திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

திட்டம் தொடங்கி 17 ஆண்டுகள் கடந்த நிலையில், விரைவில் இந்த புதிய வழித்தடத்தில் ரயில் சேவையை தொடங்க தெற்கு ரயில்வே தீர்மானித்துள்ளது.

அதற்கான முன்னோட்டமாக அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.

வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சிறப்பு ரெயில் மூலம் மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

இந்த சோதனை ஓட்டம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான கிலோமீட்டர் ரயில் பாதை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதி இல்லாத நபர்கள் நெருங்க வேண்டாம் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

சோதனை ஓட்டம் நடைபெறும் நேரத்தில் பொதுமக்கள் தண்டவாளங்கள் அருகில் செல்வதோ அல்லது பணிகளில் ஈடுபடுவதோ தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததும், விரைவில் பயணிகள் சேவை தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய இணைப்பு அமலுக்கு வந்தால், தாம்பரம் – சென்னை கடற்கரை வழித்தடத்திற்கு மாற்று பாதை உருவாகும்.

நகரின் பல பகுதிகளில் இருந்து பயணிகள் நேரடியாக பரங்கிமலை வழியாக மற்ற புறநகர் பாதைகளுடன் இணைவதற்கு இது உதவும். போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பயண நேரமும் சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / ANANDHAN