பாஜகவிற்கு தேவை ரப்பர் ஸ்டாம்ப் முதல்வர் தான் - தேஜஸ்வி யாதவ் விமர்சனம்
பாட்னா, 05 மார்ச் (ஹி.ச.) பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் இன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளார். நிதிஷ் குமாரின் இந்த முடிவு குறித்து பாட்னாவி
பாஜகவிற்கு தேவை ரப்பர் ஸ்டாம்ப் முதல்வர்தான் - தேஜஸ்வி யாதவ் விமர்சனம்


பாட்னா, 05 மார்ச் (ஹி.ச.)

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் இன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளார்.

நிதிஷ் குமாரின் இந்த முடிவு குறித்து பாட்னாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது,

பிஹார் தேர்தலின்போது 2025 முதல் அடுத்த 30 ஆண்டுகளுக்கு நிதிஷ் குமார்தான் என்ற கோஷத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்வைத்ததை அனைவரும் அறிவர்.

பிஹாரில் தேர்தல் எப்படி நடத்தப்பட்டது, எப்படி மந்திரங்களையும் தந்திரங்களையும் அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பது அந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு நன்கு தெரியும்.

நிதிஷ் குமாரை அவர்கள் (பாஜக) கடத்திச் சென்றுவிடுவார்கள், அவர் முதல்வராக தொடர பாஜக அனுமதிக்காது என்று நாங்கள் தொடர்ந்து கூறி வந்தோம். 6 மாதங்களுக்கு மேலாக அவர் முதல்வராக தொடர மாட்டார் என்றும் நாங்கள் கூறி இருந்தோம்.

அதுதான் தற்போது நடந்துள்ளது. அவர்கள் நிதிஷ் குமாரை கடத்திவிட்டார்கள். மணமகன் அலங்காரத்தை அவருக்குச் செய்து குதிரையில் ஏற்றினார்கள். திருமணச் சடங்குகளை தற்போது வேறொருவருக்குச் செய்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் என்ன நடந்ததோ அதன் மேம்பட்ட வடிவம் இது. கூட்டணி வைக்கும் கட்சிகளின் கதையை முடிக்கும் வரலாற்றைக் கொண்டது பாஜக. அந்த கட்சி பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடிகளுக்கு எதிரானது. பிற்படுத்தப்பட்டோருக்காகவும் தலித்துகளுக்காகவும் பேசும் ஒருவரை முதல்வராக நீடிக்க அக்கட்சி விடாது. அவர்களுக்குத் தேவை ரப்பர் ஸ்டாம்ப் முதல்வர்தான்.

இந்த அதிகார மாற்றம் மக்களின் விருப்பங்கள் மற்றும் உணர்வுகளுக்கு எதிரானது. பாஜகவின் தந்திரங்கள் மற்றும் குணத்தை மக்கள் நன்கு அறிவார்கள். நாங்கள் நிதிஷ் குமாருடன் இணைந்து பணியாற்றி உள்ளோம். பெரும்பாலான நேரங்களில் நாங்கள் எதிர்க்கட்சியாகவே இருந்துள்ளோம்.

கடந்த 2024, ஜனவரி 28-ம் தேதி நிதிஷ் குமார் எங்களை விட்டு வெளியேறியபோது, பாஜக ஜேடியுவை அழித்துவிடும் என்று நாங்கள் கூறியிருந்தோம்.

நாங்கள் அவர்கள் மீது அனுதாபம் கொள்கிறோம். பிஹாருக்கு அவர்

(நிதிஷ் குமார்) செய்த சேவைக்காக நாங்கள் அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b