Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 மார்ச் (ஹி.ச)
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள புஹாரி ஹோட்டல் சிக்னல் அருகே தி. நகரில் இருந்து வந்த மாநகர அரசு பேருந்து மற்றும் பல்லாவரம் பகுதியில் இருந்து அண்ணா சாலை நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரி மோதி விபத்துக்குள்ளானது.
மினி லாரியை ஓட்டி வந்த திரிசூலம் பகுதியைச் சேர்ந்த ஜீவன் ராஜ் (24) என்பவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதால், அவர் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பல்லாவரத்தில் இருந்து அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவன கட்டுமான பணிக்காக ஜல்லி ஏற்றிக்கொண்டு மினி லாரி சென்றுள்ளது.
தி.நகரில் இருந்து திருவான்மியூரை நோக்கி மாநகர பேருந்து மீது அந்த மினி லாரி மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சிக்னலை எதிர்பாராத விதமாக இருவரும் கவனிக்காமல் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தின் போது பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆனால் பேருந்தின் முன்பகுதி சேதமடைந்ததுடன், கவிழ்ந்த மினி லாரி இருந்த ஜல்லிகள் சாலையில் சிதறிக் கிடந்தன.
இதனால் சற்று போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கவிழ்ந்த மினி லாரி கிரைன் மற்றும் ஜேசிபி இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அப்புறப்படுத்தினர்.
இச்சம்பவம் குறித்து அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓட்டுநர்கள் மது போதையில் இருந்தார்களா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ