Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 06 மார்ச் (ஹி.ச.)
கோவை மாநகராட்சியின் அவரச மாமன்றக் கூட்டம், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில் இன்று
(மார்ச் 06) நடைபெற்றது.
அதில் கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் முன்பு பெரியார் திருவுருவச்சிலை அமைப்பது உள்ளிட்ட 67 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எந்த வித விவாதங்களின்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்ட அதிமுக மாமன்ற உறுப்பினர்கள், கடந்த வாரம் தான் மாமன்றத்தின் அவசரக் கூட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் கூட்டியதற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினர்.
அத்துடன், அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் மாநகராட்சி மேயர் ரங்கநாயகியிடம் வாக்குவாதம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து விவாதங்களின்றி தீர்மானங்களை நிறைவேற்றிய மேயரைக் கண்டித்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாமன்றக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன்,
திமுக மேயருக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை.
பழைய டெண்டர்கள் விடப்பட்டதைத் தற்போது தீர்மானங்களாகக் கொண்டு வந்துள்ளனர். கோவை மாநகராட்சியில் நடைப்பயிற்சி மேற்கொள்ள பூங்காக்கள் நன்றாக இல்லை. செம்மொழி பூங்காவிற்கு ஆண்டுதோறும் ரூபாய் 6 கோடி செலவுச் செய்கிறார்கள்.
காய்ந்தும், பராமரிப்பு இன்றியும் உள்ள பூங்காக்களை கோவை மாநகராட்சியின் நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு பராமரிக்க வேண்டும். கோவை மாநகராட்சியில் மக்களுக்கு என புதிதாக எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள் விமர்சித்துள்ளனர்.
இதனிடையே, கோவை மாமன்றக் கூட்டத்தில் திமுக, அதிமுக மாமன்ற உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் வெளியேறிய நிலையில் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தங்கள் வார்டில் நிலவும் அடிப்படை பிரச்சனைகள் குறித்து திமுக உறுப்பினர்கள் பேசினர்.
அதைத் தொடர்ந்து மாநகராட்சிக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அதிமுக-திமுக உறுப்பினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN