கூட்டுறவுத்துறை உதவியாளர் தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 06 மார்ச் (ஹி.ச.) கூட்டுறவுத்துறை உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வின் முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பா
Madras High Court


சென்னை, 06 மார்ச் (ஹி.ச.)

கூட்டுறவுத்துறை உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வின் முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள் / வங்கிகள் மற்றும் மாவட்ட அளவிலான கூட்டுறவுச் சங்கங்கள் / வங்கிகளில் காலியாக இருந்த 2,848 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள் / வங்கிகளுக்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 10, 2025 அன்று நடைபெற்றது. அதில், தகுதி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நவம்பர் 15, 2025 அன்று நடத்தப்பட்டது. அதேபோன்று, மாவட்ட அளவிலான கூட்டுறவுச் சங்கங்கள் / வங்கிகளுக்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 11 அன்று நடைபெற்றதுடன், அதில் தகுதி பெற்றவர்களுக்கு நவம்பர் 24 ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.

நேர்முகத் தேர்வு முடிந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை அதில் தேர்வானவர்களின் பட்டியலை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிடவில்லை. முடிவுகளை வெளியிடக் கோரி சங்க பதிவாளரை தொடர்பு கொண்டபோது,

கூட்டுறவு துறை நியமனங்கள் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தாமதமாவதாக கூறியுள்ளார்.

செயலாளர் மற்றும் உதவி செயலாளர் பணிகளுக்கான தேர்வுக்கும், உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கான தேர்வுகளுக்கு தொடர்பு இல்லை. எனவே, நேர்முகத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கான முடிவுகளை உடனடியாக வெளியிட உத்தரவிட வேண்டுமென ஈரோடு மாவட்டம் அஞ்சுரம்பாளையத்தைச் சேர்ந்த தருண்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,

செயலாளர் மற்றும் உதவி செயலாளர் பணிகளுக்கான தேர்வில் பொதுப்பிரிவு நியமனங்களை எதிர்த்த வழக்கில் முடிவுகளை வெளியிடலாம். ஆனால் நியமன உத்தரவுகளை வழங்குவதற்கு மட்டுமே தலைமை நீதிபதி அமர்வு தடைவிதித்துள்ளது” என நீதிபதி கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.டி.ஆஷா, கூட்டுறவு துறை உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட வேண்டுமென கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.

Hindusthan Samachar / ANANDHAN