Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 06 மார்ச் (ஹி.ச.)
தமிழக கேரளா மாநில எல்லையில் நீலகிரி மாவட்டம் உள்ளது.
குறிப்பாக பந்தலூர் அருகே உள்ள தாளூர் பகுதி கேரளா மாநில எல்லையை ஒட்டி இருக்கும் நிலையில் நேற்று கேரளா மாநில அதிகாரிகள் தமிழக எல்லைக்குள் நுழைந்து கேரளா மாநிலத்தின் புதிய வரவேற்பு பலகையை வைத்தனர்.
இது நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருவதுடன் கேரள மாநில அரசு வைத்துள்ள புதிய பெயர் பலகையை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனால் நீலகிரி - கேரள எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் கேரளா அரசு பெயர் பலகை வைத்த விவகாரம் சம்பந்தமாக வயநாடு மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளதாகவும் எல்லைப் பகுதியில் ஏற்கனவே வைக்கப்பட்ட பெயர் பலகை அகற்றிவிட்டு புதிதாக வைத்து இருப்பதாக நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
மேலும் பெயர் பலகைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் இரு மாநில எல்லை பிரச்சனை குறித்து வயநாடு மாநில ஆட்சியருடன் பேசி இருப்பதாகவும் தற்போது இருப்பது போலவே எல்லைப் பகுதி கண்காணிக்கப்படும் என்று கூறினார்.
மேலும் கேரளா அரசு புதிதாக வைத்துள்ள பெயர் பலகை உடனடியாக அகற்றி விடுவோம் என்ற அவர் இரு மாநில நில அளவை துறையினர் ஆய்வு செய்வார்கள் என்றும் மக்கள் பதற்றமடைய தேவையில்லை என்றும் தற்போது வைக்கப்பட்ட பெயர் பலகை அகற்ற உத்தரவிட்டு இருப்பதாகவும் பெயர் பலகை விவகாரம் தொடர்பாக இது வரை வழக்குப்பதிவு எதுவும் செய்யப்படவில்லை என்றும் ஒருவேளை பெயர்ப்பலகை அகற்றப்படவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN