Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 06 மார்ச் (ஹி.ச.)
தேனி மாவட்டம், குச்சனூரில் புகழ்பெற்ற பரிகார திருத்தலமான சுயம்பு சனீஸ்வரர் பகவான் கோயில் முன்பாக செல்லும் சுரபிநதியில் நீராடி சுவாமி தரிசனம் செய்தால் தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அதன்படி, சனீஸ்வரருக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வர்.
இந்த நிலையில், இன்று சனீஸ்வரர் பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனை முன்னிட்டு செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் லாட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது.
இன்று காலை குச்சனூர் சனீஸ்வரர் கோயில் வளாகத்தில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
சரியாக காலை 8.26 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கும் நிகழ்வை முன்னிட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Hindusthan Samachar / vidya.b