Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 மார்ச் (ஹி.ச.)
சென்னையில் இன்று நடைபெற்ற 'தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும்' நிகழ்ச்சியில் 14 முக்கிய அம்சங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,
மண்ணும், மக்களும், மாநிலமும் பயன்பெறத் தேவையான கனவுகளை உருவாக்க வேண்டும் என்பதால்தான் நான் உங்களை அழைத்திருக்கிறேன். தமிழ்நாடு அரசியல் வரலாற்றின் மிக முக்கிய நாளாக மார்ச் 6 மாறப்போகிறது. தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்யப்படும் என்ற இந்த நிகழ்ச்சி கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் மட்டுமல்ல, எதிர்காலத் தமிழகத்தையும் மனதில் வைத்து உருவாக்கப்பட்டது ஆகும். எந்தத் திட்டம் சிறப்பானது என்று என்னை கேட்டால் எல்லா திட்டங்களும் சிறப்பானது என்று தான் சொல்வேன்.
இன்னும் நிறைய சாதனைகளை செய்திருக்க வேண்டும். அரசியல் ரீதியாக சில நெருக்கடிகள் இருந்தன. நிதி நெருக்கடிகள் பல இருந்தன. அதற்காக இந்த காரணங்களை சொல்லிக் கொண்டு தப்பிக்க பார்ப்பவன் அல்ல நான். காரணம் சொல்பவன்- காரியம் செய்ய மாட்டான் என்பார்கள். சூழ்நிலைகள் எதிராக இருந்தாலும், அதனை தன் வசப்படுத்தி வெல்வதை சரியானது என்று நினைப்பவன் நான். நான் தினந்தோறும் உழைக்கிறேன். உழைத்துக் கொண்டே இருக்கிறேன். தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்த உள்ள திட்டங்கள் பற்றிய அவரது அறிவிப்புகள் பின்வருமாறு:
1.2030ம் ஆண்டுக்குள் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் 5 லட்சம், நகர்ப்புறங்களில் 2 லட்சம் என மொத்தம் 7 லட்சம் வீடுகள் கட்டித்தப்படும்.
2. மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் நோய்களை கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்படும்.
3.மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆயிரம் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்படும். 125 லட்சம் மெட்ரிக் டன்னாக உணவுப்பொருள் உற்பத்தி உயர்த்தப்படும்.
4. அனைத்து அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 100 சதவீதம் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும். 300க்கும் மேற்பட்ட நூலகங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் விளையாட்டு, வாழ்க்கை திறன் கல்வியை உறுதிப்படுத்துவோம்.
5. நான் முதல்வன் திட்டம் 20 மூலம் கூடுதல் திறன் பயிற்சி வழங்கப்படும். உலக அளவில் தமிழக இளைஞர்கள் போட்டி போடும் அளவுக்கு கூடுதல் திறன் பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
6. ஜவுளி, ஆடை தோல் போன்ற துறைகளில் பயிற்சி வழங்கப்பட்டு பிற்படுத்தப்பட்ட மக்களின் பொருளாதார முன்னேற்றம் உறுதிப்படுத்தப்படும். சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
7. சிறுபான்மை சமூகத்தினர் தொழில் தொடங்க கடன் வசதிகள் எளிமைப்படுத்தப்படும். தேவைப்படும் இடங்களில் சமூகநீதி விடுதிகள் அமைக்கப்படும். வீட்டுமனையற்ற ஒவ்வொரு ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடும்பங்களுக்கும் 2030க்குள் வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும். உண்டு உறைவிட பள்ளிகள் விரிவாக்கம் செய்யப்படும்.
8. கிராமங்களை பொருளாதார வளர்ச்சி மையங்களாக மாற்றுவோம். நகர்புறங்களுக்கு இணையான வசதிகளுடன் கிராமப்புற வளர்த்தெடுக்கப்படும். முதல்கட்டமாக 10 ஊராட்சிகளில் உத்தமர் காந்தி மாதிரி கிராம திட்டம் செயல்படுத்தப்படும்.
9. 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே எங்கள் இலக்கு ஐடி துறையில் மட்டும் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். ஜவுளி துறையிலும் நவீனமயமாக்கப்பட்டு திருப்பூர், கரூரில் 35 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும்.
10.கடல் கூண்டு மீன் வளர்ப்பு திட்டத்தை விரிவுபடுத்துவோம். புதிய மீன் பண்ணைகள் அமைக்கப்படும். மீன் உற்பத்தியை 200 டன்னில் இருந்து 400 டன்னாக உயர்த்துவோம். திடக்கழிவு மேலாண்மையில் புதிய மாற்றங்கள் செய்யப்படும். 2030ம் ஆண்டுகுள் கால்நடைகளின் எண்ணிக்கையை 3 கோடியாக உயர்த்துவோம். 2030க்குள் தினமும் 45 கோடி லிட்டர் பால் உற்பத்தி என்ற இலக்கோடு செயல்படுவோம்.
11. திடக்கழிவு மேலாண்மையில் புதிய மாற்றங்கள் செய்யப்படும். கால்நடைகளின் எண்ணிக்கையை 3 கோடியாக உயர்த்துவோம். அனைத்து மாநகராட்சிகளிலும் நவீன கலாசார மையங்கள் அமைக்கப்படும். அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் முழுமையான மழை நீர் வடிகால் அமைப்பு உருவாக்கப்படும்.
12. 2030ம் ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை சார்பாக, 5 சிறப்பு தொழில் குழுமங்கள் அமைக்கப்படும். குறிப்பாக, வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
13. நவீன சாலை தொழில்நுட்பம், ஏஐ கண்காணிப்பு ஆகியவற்றால் சாலைகள், பாலங்களின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படும். விபத்துக்கள் குறைக்கப்படும். கோவில் நகரங்கள், கடலோர சுற்றுலா தளங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் மேம்படுத்தப்படும்.
14. நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் அமல்படுத்தப்படும். தமிழகத்தின் கைத்தறி வகைகள் சர்வதேச கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b