அனைத்துப் பகுதி மக்களுக்கும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை கண்காணிப்பும் வலுப்படுத்தப்பட வேண்டும் - வேல்முருகன்
சென்னை, 06 மார்ச் (ஹி.ச) நாங்குநேரியைத் தொடர்ந்து சிவகங்கையா? அன்றாடம் அரங்கேறும் தொடர் கொலைகளுக்கு யார் பொறுப்பு? என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்ப
Velmurugan


Hsh


சென்னை, 06 மார்ச் (ஹி.ச)

நாங்குநேரியைத் தொடர்ந்து சிவகங்கையா? அன்றாடம் அரங்கேறும் தொடர் கொலைகளுக்கு யார் பொறுப்பு? என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்தில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் பொதுமக்கள் மீது நடத்திய கொடூரத் தாக்குதல் சம்பவம் தமிழகத்தின் அமைதியான சமூக வாழ்வை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மனிதநேயத்தையும், சமூக ஒற்றுமையையும் சிதைக்கும் இத்தகைய அராஜகச் செயல்களைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆயுதங்களுடன் கூட்டமாக வந்து அப்பாவி மக்களைத் தாக்கும் அளவிற்கு வன்முறை மேலோங்கியிருப்பது மிகவும் கவலைக்குரிய ஒன்று. இத்தகைய வன்முறைகள் மீண்டும் நிகழாத வகையில், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, அவர்களுக்கு சட்டத்தின் கடுமையானத் தண்டனையை உறுதி செய்ய வேண்டும்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு அரசுத் தரப்பில் உடனடி மற்றும் சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதோடு, அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.

அச்சத்தில் வாழும் அனைத்துப் பகுதி மக்களுக்கும் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல்துறை கண்காணிப்பும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

சமூக நல்லிணக்கத்தையும், மனித உயிரின் மதிப்பையும் காக்கும் பொறுப்புடன், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை எவ்விதப் பாரபட்சமும் இன்றி சட்டத்தின் முன் நிறுத்திக் கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ