Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 மார்ச் (ஹி.ச.)
சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் (மேம்பால ரயில் வழித்தடம்) தடத்தை பரங்கிமலை வரை 5 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்கும் பணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து, இத்தடத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 7, டிசம்பர் 15 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து சரக்கு ரயில்கள் இயக்கி சோதிக்கப்பட்டன. இது தொடர்பாக, ரயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர், அவரது பரிந்துரைகளை ஏற்று, திருத்தம் செய்து மீண்டும் அறிக்கை அனுப்பப்பட்டது.
இதற்கிடையில், வேளச்சேரி - பரங்கிமலை ரயில் வழித்தடத்தில் மார்ச் 10-ம் தேதி மின்சார ரயில் சேவை தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்நிலையில், வேளச்சேரி - பரங்கிமலை ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக் குமார் கர்க் நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வின் ஒரு பகுதியாக, பரங்கிமலை முதல் வேளச்சேரி வரை மோட்டார் டிராலி மூலம் விரிவான சோதனை நடத்தப்பட்டது. இதில் தண்டவாள அமைப்பு, ஜல்லிகளின் அளவு, சமன்பாடு, பயணத் தரம் ஆகியவை ஆராயப்பட்டன.
மேலும் மேம்பாலக்கட்டமைப்புகள், மின்சார வழித்தடங்கள், சிக்னல் மற்றும் இன்டர்லாக்கிங் அமைப்புகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை ஆணையர் ஆய்வு செய்தார். சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் சேவை ஒருவழியாக மார்ச் 10 ஆம் தேதி தொடங்கும் என்ற அறிவிப்பை தெற்கு ரயில்வே தற்போது வெளியிட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b