நாளை ஹிப் ஹாப் தமிழா இசை நிகழ்ச்சிக்கு செல்வோருக்கு இலவச பயணம் - சென்னை மெட்ரோ அறிவிப்பு
சென்னை, 06 மார்ச் (ஹி.ச.) சென்னையில் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஹிப் ஹாப் தமிழாவின் - நேரடி இசை நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு தடையில்லா மெட்ரோ பயணம் வழங்கப்படும் என மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்த
Free travel for


சென்னை, 06 மார்ச் (ஹி.ச.)

சென்னையில் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஹிப் ஹாப் தமிழாவின் - நேரடி இசை நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு தடையில்லா மெட்ரோ பயணம் வழங்கப்படும் என மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள YMCA கல்லூரி மைதானத்தில், 07.03.2026 (சனிக்கிழமை) அன்று ஹிப் ஹாப் தமிழாவின் - நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தென்னிந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு நிறுவனமான Torque Entertainment LLP உடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது.

Torque Entertainment LLP நிறுவனம் ஆனது ஹிப் ஹாப் தமிழாவின் - நேரடி இசை நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு மெட்ரோ இரயிலில் இலவசமாகப் பயணம் செய்ய ஸ்பான்சர் செய்கிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும் நிகழ்ச்சி நுழைவு சீட்டானது (தனித்துவமான QR குறியீடுகள்) மெட்ரோ பயண சீட்டாகவும் (Metro Ticket) செயல்படும். பயனாளர்கள் இந்த நுழைவு மெட்ரோ பயண சீட்டை நிகழ்ச்சி நடைபெறும் நாளான 07.03.2026 அன்று ஒரு சுற்று பயணத்திற்கு மட்டும் பயன்படுத்தலாம் (2 நுழைவு, 2 வெளியேறு).

இந்த பிரத்யேக QR குறியீடு கொண்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி நிகழ்வு நடைபெறும் நாளான 07.03.2026 அன்று சென்னையில் செயல்படும் எந்த ஒரு மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு சென்று திரும்ப முடியும். இசை நிகழ்ச்சிக்கு வருபவர்கள் தங்கள் பயணச்சீட்டுகளில் உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.

நிகழ்ச்சி முடிந்து பார்வையாளர்கள் வீடு திரும்புவதற்காக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் நந்தனம் மெட்ரோ நிலையத்திலிருந்து மெட்ரோ இரயில் சேவைகளை நீட்டித்துள்ளது.

- வழித்தடம் 1-ல் நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ இரயில் நள்ளிரவு 12 மணிக்கும்,

- வழித்தடம் 1-ல் நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து விமான நிலைய மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ இரயில் நள்ளிரவு 12 மணிக்கும் புறப்படும்.

- வழித்தடம் 2-ல் பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள், புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் மட்டுமே மாறி செல்லலாம்.

- பயணிகள் கடைசி மெட்ரோ இரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பயணிகள் இந்த பயணச் சலுகையை முழுமையாகப் பயன்படுத்தி, பாதுகாப்பாகவும் நெரிசல் இல்லாமலும் மெட்ரோ இரயிலில் பயணம் செய்து நிகழ்ச்சிகளுக்கு செல்ல வழிவகை செய்கிறது.

பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கும், மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் இதுபோன்ற ஒத்துழைப்பை வழங்க சென்னையில் உள்ள மற்ற பெரிய நிகழ்வு அமைப்பாளர்களையும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அழைக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b